
posted 14th November 2022
“வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு முன்னெடுத்த தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு கோரிய நூறு நாட்கள் செயல்முனைவின் நூறாவது நாளன்று ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு கோரிக்கை பிரகடனப்படுத்தப்பட்டு அரசுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை நாம் பாராட்டுகின்றோம்.”
இவ்வாறு, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹஸனலி கூறினார்.
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராமிய அமைப்பாளர்களுக்கான செயலமர்வு ஒன்று கல்முனையில் நடைபெற்றது.
செயலமர்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட செயற் குழுவின் செயலாளர் சரீப் முஹம்மட், ஹக்கீம் தலைமையில் கல்முனை பரடைஸ் கேட்போர் கூடத்தில் செயலமர்வு நடைபெற்றது.
பிரதி இணைப்புச் செயலாளர் ஏ.எம். அஹ{வரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான செயலமர்வில் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கட்சி தொடர்பிலான ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
பிரதம அதிதி செயலாளர் நாயகம் ஹஸனலி தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“தமிழ் பேசும் மக்களுக்கான நிலைபேறான அரசியல் தீர்வுக்கான மேற்படி பிரகடனத்தில் வடக்கு கிழக்குவாழ் முஸ்லிம்கள் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
இந்த அடிப்படையில் முஸ்லிம்களுக்கான தீர்வை யார் முன்வைப்பது என்ற கேள்வி எழுந்துள்ள போதும் மறைந்த மாமனிதர் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் இதற்கான திடமான தீர்வை எமக்கு விட்டுச் சென்றுள்ளார்.
அவர் முன்வைத்த கரையோர மாவட்டம், தென்கிழக்கு அலகு, பாண்டிச்சேரி ஆட்சி முறையிலான ஆட்சி என்பவற்றை எமது ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு வலியுறுத்துவதுடன், அதற்கான அழுத்தங்களையும் தொடரவுள்ளது.
இந்த நிலையில் கடந்த 22 வருட காலமாக, தலைவரின் மறைவுக்குப் பின்னர் நாடாளுமனறத்தில் உரையாற்றிவரும் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் தலைவர் கூட கரையோர மாவட்டம் பற்றியோ, தலைவர் அஷ்ரபின் குறித்த தென்கிழக்கு அலகு பற்றியோ வாய் திறந்ததாக இல்லை.
தலைவர் அஷ்ரப் உருவாக்கிய கட்சியின் அடிப்படைக்கொள்கைகள், அவர் மறைந்த 22 வருடகாலத்தில் முற்றாக மாற்றப்பட்டுள்ளது.
மசூறா அடிப்படையில் கட்சியின் தீர்மானங்கள் முன்னெடுக்கப்படாது தனி நபர்களின் அதிகார ஆளுகை கொண்ட கட்சியாகவே முஸ்லிம் காங்கிரஸ் இன்றுள்ளது.
இந்த வகையில் அஷ்ரபினால் ஸ்தாபிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் கொள்கைகள், யாப்பு கொண்ட எமது ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பினர், ஊழல் வாதிகளாகவும், பொய் வாக்குறுதி அளிப்பவர்களாகவும், அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுத்து தம்மை மேம்படுத்தும் கேவல அரசியலை ஒரு போதும் செய்யமாட்டோம்.
மன்னிப்பு என்ற போர்வையில் விவஸ்தையற்ற விழுமியங்கள் இன்று முஸ்லிம் காங்கிரஸை ஆட்கொண்டுள்ளது. தனிநபர் தீர்வு கட்சியின் சமூக அரசியலை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.
முஸ்லிம்கள் செறிந்தும் பெரும்பான்மையாகவும், பன்னெடுங் காலமாக வாழ்ந்து வரும் நமது கரையோர மாவட்டத்தில் நமது இருப்பு, தனித்துவ அடையாளம், நிலவுரிமை அந்தஸ்த்துபோன்ற சுய கௌரவ விழுமியங்கள் இன்று பெரும் தேசிய அரசியல் மாயைக்குள் சிக்குண்டு கரைந்து வேறும் கானல் நீராகிப் போய்விட்டன.
நாடளாவிய ரீதியில் பரந்து வாழும் முஸ்லிம்களின் தனித் தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு அன்று தலைவர் அஷ்ரப் தொடங்கி வைத்த பணியை அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடரும் புதிய பயணத்தையே நாம் ஆரம்பித்துள்ளோம்.
தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின் கடந்த 22 வருடங்களில் கிழக்கு முஸ்லிம்கள் இழந்த கௌரவம் மற்றும் இழந்த தனித்தேசியத்தை மீளப் பெறப்பாடுபடுவோம்.
கிழக்கு முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக முஸ்லிம் தேசிய இனமாக உருவானால் மட்டுமே பலமாகவும், ஏன் கிழக்கிற்கு வெளியிலுள்ள முஸ்லிம்களுக்கும் பலமாக அமையும், இதற்காகப் போராட வேண்டிய கட்டம் உருவாகியுள்ளது” என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)