கள்ளனைப்போல் வெள்ளம் எங்களை கவ்விக் கொண்டது

திடீரென கள்ளன் உட்புகுவதுபோல் நடுச்சாமத்தில் கன மழை பெய்து நாங்கள் தங்கி வாழும் அகதி முகாமுக்குள் வெள்ளம் உட்புகுந்தமையால் உடமைகளை மட்டுமல்ல எங்கள் பிள்ளைகளின் கல்வி தொடர்பான அனைத்தையும் வெள்ளத்தில் மிதக்க விட்டுவிட்டோம் என வெள்ளத்தில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் தேவசகாயம் அன்ரனி தாசன் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள மூன்று அகதி முகாம்களிலுள்ள மக்கள் கடந்த 09.11.2022 அன்று முதல் பெய்து வரும் கன மழையின் காரணமாக அங்கு குடியிருக்கும் 57 குடும்பங்களிலுள்ள அதிகமானோர் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகி தாங்கள் சிறுக சிறுக சேர்த்த உடமைகளையும் வெள்ளத்தில் மிதக்க விட்டு இடம்பெயர்ந்து காணப்படுகின்றனர்.

நிலவன் அகதி முகாமில் இருந்து வெள்ளத்தின் காரணமாக தற்பொழுது பொது மண்டபத்தில் தங்கியிருக்கும் தேவசகாயம் அன்ரனி தாசன் தெரிவிக்கையில்

நாங்கள் 1990ம் ஆண்டு பலாலியிலிருந்து இடம்பெயர்ந்து தற்பொழுது யாழ்ப்பாணம் பொலிகண்டி ஜே.394 கிராம அலுவலகர் பிரிவிலுள்ள அகதி முகாமில் வசித்து வருகின்றோம்.

முப்பது வருடங்களாக இவ் அகதி முகாமில் இருந்து வரும் நாங்கள் ஒவ்வொரு வருடமும் பருவ மழை காலங்களில் இவ் முகாமில் ஏற்படும் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து கோவில்களிலும் பொது மண்டபங்களிலும் தங்கி வாழும் நிலையே எமக்கு ஏற்பட்டு வருகின்றது.

இவ் வருடம் 09.11.2022 அன்று பெய்த மழையானது நடுச்சாமம் நேரத்தில் கள்ளன் வந்ததுபோன்று எங்களை கவ்விக் கொண்டது.

அதாவது பெய்த இவ் மழையால் எங்கள் பகுதிக்குள் நடுச்சாமம் வேளையில் வெள்ளம் ஏற்பட்டது.

இதன்போது நாங்கள் எங்கள் உடமைகளை பாதுகாக்க முடியாத நிலையில் எங்கள் பிள்ளைகளின் பாடசாலை புத்தகம் கொப்பிகளையும் எடுத்து வரமுடியாத நிலையில் யாவும் வெள்ளத்தில் மிதக்க தொடங்கி விட்டது.

யாவற்றையும் வெள்ளத்தில் மிதக்கவிட்ட நிலையில் கையில் எடுத்துக் கொண்ட ஒரு சில துணிமணியுடனே நாங்கள் இந்த மண்டபத்துக்குள் தஞ்சம் அடைந்து இருக்கின்றோம்.

பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவால் சமைத்த உணவு மட்டும் எங்களுக்கு தற்பொழுது கிடைக்கப் பெறுகின்றது. இந்த நிலை எங்களுக்கு தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் மனிதாபிமானம் நோக்கி எங்களை எங்கள் சொந்த இடத்தில் மீள் குடியேற்ற வேண்டும் என்றுதான் நாங்கள் கெஞ்சிக் கொண்டு இருக்கின்றோம் என வெள்ளத்தில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் தேவசகாயம் அன்ரனி தாசன் இவ்வாறு தெரிவித்தார்.

கள்ளனைப்போல் வெள்ளம் எங்களை கவ்விக் கொண்டது

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)