
posted 1st December 2022

அண்மையில் வெளியான கல்வி பொது தராதர சாதாரணப் பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் 39 மாணவர்கள் 9ஏ பெற்றுள்ளனர். இவர்களில் 30 மாணவிகளும் 9 மாணவருமே இச் சித்தியை பெற்றுள்ளனர்.
இச் சித்தியில் 9 ஆண்களில் 7 மாணவர் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையிலிருந்து சித்தியடைந்துள்ளனர்.
இவர்களையும் மற்றும் அணமையில் இப் பாடசாலையிலிருந்து உதைபந்தாட்டப் போட்டியில் தேசிய மட்டத்தில் விளையாடி இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட உதைபந்தாட்ட வீரர்களையும், இவ் வருடம் மன்னார் மாவட்டம் சார்பாக தேசிய மட்டத்தில் விளையாடி 17 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் 3வது இடத்தையும், 17 வயதுக்கு மேற்பட்ட அணியினர் 2வது இடத்தையும் பெற்றுள்ள வீரர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு செவ்வாய் கிழமை (29) இடம்பெற்றது.
கல்வியிலும் விளையாட்டிலும் அண்மையில் சிறந்து விளங்கிய மாணவர்களையும், அவர்களின் பெற்றோரையும், பயிற்றுவிப்பாளர்களையும் மாலைகள் இட்டு மன்னார் நகரிலிருந்து ஊர்வலமாக அழைத்துச் சென்றபோது, மன்னார் மாவட்ட செயலகத்தக்கு முன்னால் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் மாவட்ட செயலக அதிகாரிகள் ஊழியர்கள் மாவட்டத்துக்கு பெருமையீட்டி தந்தமைக்காக அங்கும் கௌரவிக்கப்பட்டு அன்பளிப்பகளும் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து இவர்கள் கல்லூரிக்கு பேண்ட் இசையுடன் அழைத்துச் செல்லப்பட்டு அங்கும் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி அதிபர் அருட் சகோதரர் எஸ்.ஈ. றெஜினோலட் (டிலாசால் சபை) தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வுக்கு விஷேட விருந்தினர்களாக சூடான் நாட்டு பாடசாலை அதிபர் அருட்சகோதரர் யூஸ்தஸ் அமரஜோதி (டிலாசால் சபை), மன்னார் பேராலய பரிபாலகர் அருட்திரு இ. அகஸ்ரின் புஸ்பராஜ் அடிகளார் , திட்டமிடல் பிரதி கல்விப் பணிப்பாளர் அ. பிரேமதாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)