
posted 1st November 2022
கல்முனை தமிழ் பிரதேச செயலக கோரிக்கை விவகாரத்தை முஸ்லிம், தமிழ் இரு தரப்பினரதும் இணக்கப்பாடின்றி ஒருதலைப்பட்சமாக தீர்த்து விட முடியாது என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேலும் கூறியதாவது;
கல்முனை உப செயலக பிணக்கு தொடர்பில் நாங்கள் மௌனம் காத்து வருவதாக சிலர் குற்றச்சாட்டி வருகின்றனர். இது 30 வருட காலமாக புரையோடிப் போயிருக்கின்ற பிரச்சினையாகும். இதனை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஒரே நாளில் தீர்த்து விட முடியாது. முஸ்லிம், தமிழ் சமூகங்கள் சம்மந்தப்பட்ட இந்த நீண்ட கால பிணக்கு தொடர்பில் இரு சகோதர சமூகத்தினரும் சுமூகமாக பேச்சுவார்த்தை நடாத்தி, இணக்கமான தீர்வொன்றையே காண வேண்டியிருக்கிறது.
நாங்களும் இதற்கான நகர்வுகளை மிகவும் சாணக்கியமாக செய்து கொண்டுதான் இருக்கிறோம். எமது தரப்பு நியாயங்களை உயர் மட்டங்களில் முன்வைத்திருக்கின்றோம். இவற்றையெல்லாம் நாங்கள் ஊடக செய்திகளுக்காக பிரஸ்தாபிப்பதில்லை. எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லி விடவும் முடியாது. இது விடயமாக ஊடகங்களில் எமது தரப்பு செய்திகளை காணக்கிடைக்கவில்லை என்பதற்காக நாங்கள் எதுவும் செய்யாமல் மௌனமாக இருக்கிறோம் என்று அர்த்தமாகி விடாது.
எமது நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், தனது தலையாய கடமையாக இதனைச் சுமந்து கொண்டு, கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். சகோதர தமிழ் பிரதிநிதிகள் என்ன சொல்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஹரீஸ் என்றொரு எம்.பி. இல்லாதிருந்தால் நாங்கள் நினைத்தது போன்று எப்போதோ சாதித்திருப்போம் என்று அவர்கள் கூறி வருகின்றனர். ஆக, எவரும் நினைத்தது போன்று செய்து விடாமல், இரு தரப்பினரதும் இணக்கத்துடனேயே இப்பிணக்கு தீர்க்கப்பட வேண்டும் என்பதில் குறியாக இருந்து செயற்படுகின்றோம் என்பதை புரிந்து கொள்ளலாம்.
இந்த விடயத்தில் எமது தலைவர் ரவூப் ஹக்கீமும் மிகுந்த பொறுப்புணர்வுடன் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார். இவ்விவகாரம் தொடர்பான நகர்வுகளின்போது அவர் பக்கபலமாக இருந்து செயலாற்றி வருகின்றார் என்பதை ஆணித்தரமாக சொல்லிவைக்க விரும்புகின்றேன்.
அதேவேளை, நிந்தவூர் பிரதேச செயலகத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் கல்முனை பிரச்சினை ஆராயப்பட்டு, முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாக ஒரு வதந்தி கிளப்பி விடப்பட்டிருக்கிறது. இது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்ற அப்பட்டமான பொய்யாகும். உண்மையில் அங்கு நடந்தது என்ன?
எமது கல்முனை மாநகர சபை எல்லையினுள் அமைந்துள்ள பெரிய நீலாவணை - 02 தமிழ், முஸ்லிம் கிராம சேவகர் பிரிவுடன் தொடர்புடைய சர்ச்சைக்கு தீர்வு கோரி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி, தெளிவுபடுத்தியிருந்தேன். எனது வேண்டுகோளை நேரடியாக விசாரித்து, பரிசீலிப்பதற்காகவே நிந்தவூர் பிரதேச செயலகத்தில் அவர் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார்.
அங்கு குறித்த கிராம சேவகர் விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது என்னால் முன்வைக்கப்பட்ட நியாயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒரு கிராம சேவகர் பிரிவை உருவாக்குவதற்கான சாதக நிலைமை எட்டப்பட்டிருக்கிறது. அத்துடன் இஸ்லாமாபாத்தில் உள்ள தனியார் காணியொன்று பற்றிய முறைப்பாடு தொடர்பிலும் அரசாங்க அதிபர் கள விஜயம் மேற்கொண்டு, நிலைமையை ஆராய்ந்தார்.
இக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பிலோ அதன் எல்லைகள் பற்றியோ எதுவும் பேசப்படவில்லை. மாவட்ட அரசாங்க அதிபரின் நிகழ்ச்சி நிரலில் இவ்விடயம் இருக்கவில்லை. ஹரீஸ் எம்.பி. பங்குபற்றாத எந்தவொரு கூட்டத்திலும் இவ்விவகாரம் பற்றி உத்தியோகபூர்வமாக பேசப்படவோ தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவோ மாட்டாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கல்முனை முதல்வர் மேலும் குறிப்பிட்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)