ஊடகவியலாளர் மறைவுக்கு அனுதாபம்

“மூத்த பிராந்திய ஊடகவியலாளர் அலியார் றசீதின் மறைவு ஊடகத்துறைக்கும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்”
இவ்வாறு, மூத்த பிராந்திய ஊடகவியாலர் ஏ.எம்.ஏ. றசீதின் மறைவு தொடர்பில், இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான அல்-ஹாஜ் என்.எம். அமீன் விடுத்துள்ள அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நிந்தவூரைப் பிறப்பிடமாகவும், பொலனறுவை மாவட்டம் கிரித்தல முஸ்லிம் கொலனியை வசிப்பிடமாகவும் கொண்ட மூத்த ஊடகவியளார் றசீத் தமது 81 ஆவது வயதில் இறையடியெய்தியதுடன், அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் கதுறுவெல முஸ்லிம் மையவாடியிலும் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் அல் - ஹாஜ் என்.எம். அமீன் தமது அனுதாப அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

“1965 ஆம் ஆண்டு முதல் இன்று வரை முழு நேர பிராந்திய ஊடக வியலாளராகப் பணியாற்றிவந்த அலியார் றசீட் முஸ்லிம் மீடியா போரத்தின் பொலனறுவை மாவட்ட இணைப்பாளராகவும் இருந்து வந்துள்ளார்.

குறிப்பாக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் சம்மாந்துறை, கிரித்தல குறூப் நிருபராக மிக நீண்டகாலம் பணியாற்றிய அவர் முக்கிய பிரதேச அரசியல் வாதிகள் மட்டுமன்றி சமூகத் தலைவர்களதும் நன்மதிப்பைப் பெற்றுத் திகழ்ந்தார்.

ஊடகப் பணிக்காகப் பெரும் அர்ப்பணிப்புடன் திகழ்ந்த அலியார் றசீட்டின் மறைவு ஊடகத்துறைக்கும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்.

முஸ்லிம் மீடியாபோரம் ஊடகத்துறை சேவைக்காக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்திருந்தமையையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூருவதுடன் ஜென்னத்துல் பிர்தௌஸ் கிடைக்கவும் பிரார்த்திக்கின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் மறைவுக்கு அனுதாபம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)