
posted 24th November 2022
ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தினர் நேற்றைய தினம் (புதன்) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனைச் சந்தித்து தமது திட்டம் தொடர்பாக கலந்துரையாடினர்.
உலக உணவுத் திட்டத்தின் சகோதர நிறுவனமான ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம், சுகாதாரம் மற்றும் நலன் பேணல் சேவைகளுக்கான மேலதிக பண உதவியாக 5 ஆயிரம் ரூபாவை வழங்கும் திட்டத்தை முல்லைத்தீவில் நடைமுறைப்படுத்தவுள்ளது.
இதனை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், சுகாதார வைத்திய சேவைகள், அதற்கான போக்குவரத்து மற்றும் போசாக்கு போன்றவற்றுக்கு பயன்படுத்த முடியும்.
இதேவேளை, உலக உணவுத் திட்டம் உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவியை முல்லைத்தீவு மாவட்டத்தில் வழங்கி வருகிறது.
தாய்வழி சுகாதாரம் மற்றும் விரிவான பாலியல் கல்வி மற்றும் இலங்கையில் ஏற்பட்டுள்ள அண்மைய பொருளாதார நிலைமையின் விளைவாக உலக உணவுத் திட்டம், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்துடன் இணைந்து மிகவும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க அரசாங்கத்துக்கு உதவுவதுடன், குறிப்பாக பெண்களின் அத்தியாவசிய தேவைகளைப் பண மானியம் மூலம் பூர்த்தி செய்ய உத்தேசித்துள்ளது.
இலங்கையில் நடத்தப்பட்ட பல்வேறு சமீபத்திய ஆய்வுகளின்படி, பொருளாதார நெருக்கடியால் பெண்கள் விகிதாசாரத்தில் பாதிக்கப்படுகின்றனர்.
அடிப்படைப் பொருட்களுக்கான விலைகள் உயர்ந்துள்ளதால், உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு முன்னுரிமையாக இருப்பதை உறுதிப்படுத்தும் திட்டமாக இது அமையவுள்ளது.
இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் அதிகாரிகளான நிசாடி மற்றும் சிகார் ஆகியோருடன் உலக உணவுத் திட்டத்தின் மாவட்ட பொறுப்பதிகாரி ஜெயபவானி, மாவட்ட உலக உணவுத்திட்ட உத்தியோகத்தர்கள், சர்வோதயம் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY