
posted 1st November 2022
நீதி அமைச்சரை வெளியேறுமாறு வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 30.10.2022 அன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான நடமாடும் சேவை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் விஜயதாஸ பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்னைய நாள் காலை முதல் கொட்டும் மழைக்கும் மத்தியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திடீரென மாவட்ட செயலகத்துக்குள் நடமாடும் சேவை நடக்கும் மண்டபத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் “நீதி அமைச்சரே வெளியேறு...”, என்ற கோஷங்களை எழுப்பினர்.
அத்துடன், “ஓ. எம். பி. (காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம்) வேண்டாம்”, “சர்வதேச நீதி விசாரணையை மட்டுமே நாங்கள் கோருகின்றோம்”, “இரண்டு இலட்சம் ரூபாய் வேண்டாம்”, “நீதி அமைச்சரே வெளியேறு”, “விஜயதாஸ ராஜபக்ஷவே வெளியேறு”, எனக் கோஷம் எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)