2023 பாதீடு தயாரிப்பு

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள உள்ளுராட்சி சபைகள் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு (வரவு செலவுத்திட்டம்) தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள், சபை உறுப்பினரக்ள் மற்றும் பிரதேச பொது அமைப்புக்களின் ஆலோசனைகள், பிரேரணைகளைப் பெற்று பாதீடு தயாரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இவ்வாறு தயாரிக்கப்படும் பாதீடுகள் அடுத்த மாதத்திற்குள் (டிசம்பர்) சபை அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட்டு உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் சபையில் நிறைவேற்றப்பட வேண்டும்.

வரிகள் அறவிட்டு செலவு செய்யும் ஓர் அமைப்பாகவுள்ள உள்ளூராட்சி சபைகள் நாட்டின் தற்போதய பொருளாதார நெருக்கடி நிலையில், வருமான வீழ்ச்சியையே எதிர் நோக்கியுள்ளதால் வரிகளை அதிகரிக்கவோ, அறவிடவோ முடியாத இக்கட்டான நிலமைக்குத்தள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பாதீடு தயாரிக்கும் விடயத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் திரிசங்கு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மக்களின் இன்றைய இக்கட்டான பொருளாதாரக் கஷ்டங்களுக்கு மத்தியில் வருமானம் பெற வரிகளை அதிகரிக்கமுடியாமலும், 2023 மார்ச் மாதத்துடன் சபைகள் கலைக்கப்பட்டு, உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை வரலாமென்ற எதிர்பாரப்புக்கு மத்தியிலும் பாதீடு தயாரிப்பு விவகாரத்தில் உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் திரிசங்கு நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

எது எப்படியிருப்பினும் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டைத் தயாரித்து சபைகளில் அடுத்த மாத்திற்குள் அங்கீகாரம் பெற்றே ஆக வேண்டுமென்ற கட்டாய நிலைமைக்கும் அவர்கள் உள்ளாகியுள்ளனர்.

2023 பாதீடு தயாரிப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)