
posted 23rd November 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஆளும் கட்சியினர் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு (வரவு - செலவுத் திட்ட உரை) நவம்பர் 14 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.
நவம்பர் 15 ஆம் திகதி முதல் 22 வரை 7 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.
22 மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
23 முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமாகவுள்ளதுடன், சனிக்கிழமைகள் உள்ளடங்கலாக எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி வரை விவாதம் இடம்பெறும்.
டிசம்பர் 8 ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)