
posted 7th November 2022
சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30 ஆவது பேராளர் மாநாடு, புத்தளம் கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று (7 ஆம் திகதி) வெற்றிகரமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பெருமளவான பேராளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதுடன், மாநாடு இரு அமர்வுகளாகவும் நடைபெற்றது.
மாநாட்டிற்கு தலைமை வகித்த முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மாநாட்டு மண்டபவளாகத்தை வந்தடைந்தபோது, முஸ்லிம்களின் பாரம்பரிய கலாச்சார நிகழ்வான மாணவர் பொல்லடி சகிதம் வரவேற்கப்பட்டார்.
மாநாட்டில் சர்ச்சைக்குரிய 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், மற்றும் வரவு செலவுத்திட்டத்திற்கு கட்சிக் கட்டுப்பாட்டை மீறி வாக்களித்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். பைஸால் காசிம், எம்.எஸ். தௌபீக் ஆகியோர் கலந்து கொண்டதுடன், பதவி இடைநிறுத்தப்பட்ட மற்றய நாடாளுமன்ற உறுப்பினரான எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து கொள்ளவில்லை.
அதேவேளை சர்ச்சைகளுக்கு மத்தியிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைஸால் காசிம் எம்.எஸ். தௌபீக் ஆகியோருக்கு மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டன.
நேற்றைய கட்டாய உயர்பீடக் கூட்ட முடிவின்படி கட்சியின் புதிய நிருவாகிகளாக தெரிவு செய்யப்பட்டோரின் விபகரங்களை மாநாட்டின் முதலாவது அமர்வின் போது தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்தார்.
இதன்படி கட்சியின் தலைவராக ரவூப் ஹக்கீம், செயலாளராக சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், தவிசாளராக முழக்கம் ஏ.எல். அப்துல் மஜீத், தேசிய அமைப்பாளராக எம்.எஸ். தௌபீக், பொருளாளராக எம். பைஸால் காசிம், பிரதி தேசிய அமைப்பாளராக எம்.எஸ். உதுமாலெவ்வை, மூத்த பிரதித் தலைவராக எம்.ஐ.எம். மன்சூர், பிரதித்தலைவராக அலிசாஹிர் மௌலானா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் உட்பட உயர்பீட உறுப்பினர்களது நியமனமும் இதன் போது அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் வெற்றிகரமானதாக மேற்படி 30 ஆவது பேராளர் மாநாடு நிறைவு பெற்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)