
posted 4th November 2022

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 30 ஆவது பேராளர் மாநாடு எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட் கிழமை, புத்தளத்தில் நடைபெறவிருக்கின்றது.
கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில், புத்தளம் கே.ஏ. பாய்ஸ் ஞாபகர்த்த மண்டபத்தில் மாநாடு நடைபெறும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் பேராளர்கள் உட்பட கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்த்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
மாநாட்டில் கட்சித்தலைவர் ரவூப் ஹக்கீம் பேராளர் மாநாட்டுப் பேருரையாற்றுவதுடன், கட்சியின் புதிய நிருவாகிகள் தெரிவும் பிரகடனப்படுத்தப்படும்.
இதேவேளை “மொட்டு” ஆட்சியின் போது (பொது ஜன பெரமுன) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில், கட்சிப் போராளிகள் மத்தியில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
கட்சிப்பதவிகளிலிருந்து இடை நிறுத்தப்பட்டு ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மேற்படி மொட்டுக்கு முட்டுக் கொடுத்த கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களை இந்த பேராளர் மாநாட்டுக்கு அழைப்பதா, இல்லையா? என்பது தொடர்பிலேயே கருத்துப் பரிமாற்றங்கள் தற்சமயம் கட்சி வட்டாரங்களில் சர்ச்சையாகக்கிளம்பியுள்ளன.
எனினும் எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறும் கட்சியின் அரசியல் உச்சபீடக் கூட்டத்திலேயே இந்த சர்ச்சைக்கான தீர்மானம் எடுக்கப்படுமென கட்சியின் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத் கருத்து தெரிவித்தார்.
கட்சியின் உப தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ் பொருளாளர் எம். பைஸால் காசிம், தேசிய அமைப்பாளர் எம்.எஸ். தௌபீக் ஆகியோரின் பதவிகளே இடை நிறுத்தப்பட்டு, மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு முகம் கொடுத்துள்ளனர்.
ஏற்கனவே கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)