
posted 14th November 2022
எங்கள் அகதி முகாம் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால் எங்கள் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை இருப்பதுடன் எங்கள் இயற்கை கடன்களையும் கழிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். ஆகவே எங்கள் சொந்த இடத்தில் மீள் குடியேற் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னவளை முகாமில் இருக்கும் அன்ரன்ராஜா இவ்வாறு தெரிவித்தார்.
யாழ் பகுதியில் பெய்து வந்துள்ள மழையினால் பருத்தித்துறை பகுதியில் 30 வருடங்களாக அமைந்துள்ள மூன்று அகதி முகாம்கள் நீரினால் அமிழ்ந்துள்ளன.
இவ் முகாமில் இருக்கும் அன்ரன்ராஜா ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்
யுத்தம் காரணமாக 1990 ம் ஆண்டு நாங்கள் எங்கள் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தோம்.
ஒரு வருடத்துக்கு மட்டும் இங்கு இருங்கள் பின் உங்களை சொந்த இடத்துக்கு மீள் குடியேற வழி செய்வோம் என தெரிவித்து இவ் முகாமில் எங்களை குடியேற்றினர்.
நாங்கள் விரைவில் எங்கள் சொந்த இடத்துக்குச் செல்வோம் என எதிர்பார்த்து முப்பது வருடங்களும் கடந்து விட்டன.
வருடந்தோறும் இப் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக நாங்கள் இருக்கும் சின்னவளை முகாம் வெள்ளத்தில் மூழ்கிவரும் நிலையே தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது
கடந்த மாதம் ஊடகங்களில் நாங்கள் பார்த்தோம் எங்களை வெகு விரைவில் எங்கள் இடங்களில் மீள்குடியேற்றுவதாக
ஆனால் ஊடகத்தில் வந்த செய்தியாக மாத்திரமே இருந்ததே தவிர அதன் பின் எந்த தகவலும் ஆய்த்தங்களும் இல்லாத நிலையே காணப்படுகின்றது.
இப்பொழுது இங்கு பெய்துள்ள மழையால் இவ் முகாமில் வாழ்ந்த குடும்பங்களாகிய நாங்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளோம்.
பிரதேச செயலக அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர். எங்களுக்கு இங்கு இது கடைசி வெள்ளமாக இருக்கவும் நாங்கள் எங்கள் கிராமத்தில் மீள் குடியேற்றப்பட வேண்டும் என எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றோம்.
இவ் வெள்ளத்தின் காரணமாக எங்கள் பிள்ளைகள் பாடசாலை செல்ல முடியாத நிலை இருந்து வருகின்றது.
இவ் வெள்ளத்தினால் பிள்ளைகளின் புத்தகங்கள் எல்லாம் அழிந்து விட்டது. உடுப்புக்களுக்கும் இதே நிலைதான்.
எங்களுடைய பிள்ளைகளை நாங்கள் வெளியில் அழைத்துச் செல்ல வேண்டுமானால் தூக்கிக் கொண்டே செல்ல வேண்டும்.
நாங்கள் இருக்கும் இந்த மண்டபமும் வெள்ளத்துக்குள்ளே இருப்பதால் இந்த நிலை. மூன்று அடி நீருக்குளே நாங்கள் இருக்கின்றோம்.
இதற்குள் இருக்கும் தண்ணீர் மழை நீர் மட்டுமல்ல வெளியிலிருந்து வரும் நீரின் காரணமாக சுகாதார சீர்கேடுகளும் மிக மோசமாக காணப்படுகின்றது.
மலசலம் கழிவுக்கும் நாங்கள் தற்பொழுது மிக கஷ்டத்தின் மத்தியிலேயே இருக்கின்றோம்.
ஆகவே அரசானது மற்றும் அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் எங்களை மீள் குடியேற்றுவதற்கான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு நிற்கின்றோம் என யாழ் பருத்தித்துறை பகுதியிலள்ள சின்னவளை முகாமில் இருக்கும் அன்ரன்ராஜா இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)