
posted 15th November 2022
“நாட்டில் எதிர்காலத்தில் வரவிருக்கும் எந்தத் தேர்தலுக்கும் முகம் கொடுப்பதற்கு ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது”
இவ்வாறு ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளரும் கட்சியின் உச்ச பீட உறுப்பினருமான சரீப் முஹம்மட் ஹக்கீம் கூறினார்.
கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராமிய அமைப்பாளர்களுக்கான செயலமர்வுக்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கல்முனை பரடைஸ் மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த செயலமர்வில் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹஸனலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மாவட்ட செயற்குழு செயலாளரும், உச்சபீட உறுப்பினருமான சரீப் முஹம்மட் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்குடன் எமது மறைந்த மாபெரும் தலைவர் அஷ்ரபின் வழியில், அவரது கொள்கைகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்டதே ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பாகும்.
பட்டம், பதவிகளையோ, சுய இலாபங்களையோ நோக்காகக் கொண்டு எமது கட்சி ஒரு போதும் செயற்படமாட்டாது.
சமூகப் பணி, சமூகநிலை பற்றிய சிந்தனையுடன், இன்றைய சமூகக் கட்டமைப்பை அங்கலாய்த்த வண்ணமுள்ள எமது கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸனலியின் அனுபவமிக்க வழிகாட்டுதலில் நாம் கட்சிப் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
சிலரது கடந்த கால அரசியல் காய் நகர்த்தல்களில் முதன்மைப்பட்ட அரிசி, சீனி, பால்மா பக்கற், மண்வெட்டி, சமையல் எரிவாயு அடுப்பு போன்றவற்றை வழங்கி அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கும் கேவல நிலையில் நாமில்லை.
இத்தகையை என்ன தருவீர்களென்ற கட்டமைப்பிற்குள் ஊடுருலுவி, சமூக நலனை நோக்காகக் கொண்ட தூய்மையான அரசியலையே நாம் முன்னெடுப்போம்.
எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் வந்தாலும் நாம் அதற்கு முகம் கொடுத்து போட்டியிடத்தயாராகவே உள்ளோம்” என்றார்.
பிரதி இணைப்புச் செயலாளர் ஏ.எம்.அஹ{வர் உட்பட பிரதேச இணைப்பாளர்கள் பலரும் கருத்துரையாற்றினர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)