மன்னார் மாவட்டத்துக்கு புதிய உதவித் தேர்தல் ஆணையாளராக  வே. சிவராசா நியமனம்.

மன்னார் மாவட்டத்திற்கு புதிய உதவித் தேர்தல் ஆணையாளராக திரு. வேலாயுதம் சிவராசா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்ட செயலகத்தில் உதவி மாவட்டச் செயலாளராக கடமையாற்றி வந்த திரு.வேலாயுதம் சிவராசா அவர்கள் மன்னார் மாவட்டத்தின் உதவித் தேர்தல் ஆணையாளராக நியமனம் பெற்றுள்ளார்.

இவர் கடந்த திங்கள்கிழமை (14.11.2022) கொழும்பில் தனது நியமனக் கடிதத்தை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து மன்னாரில் மன்னார் மாவட்டத்திற்கான புதிய உதவித் தேர்தல் ஆணையாளர் பதவியை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் அவர்களின் முன்னிலையில் திங்கள் கிழமை (21.11.2022) தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் வரணியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் வரணி மத்திய கல்லூரியன் பழைய மாணவருமாவார். இவர் 2000ம் ஆண்டு அரசாங்க உத்தியோகத்தராக நியமனம் பெற்றதைத் தொடர்ந்து வடமாகாண சமூக சேவை திணைக்களத்தில் உத்தியோகத்தராக கடமையாற்றியுள்ளார்.

பின் 2019ம் ஆண்டு முதல் இவர் மன்னார் மாவட்ட செயலகத்தில் உதவி மாவட்ட செயலாளராக கடமையாற்றி வந்த நிலையில் தற்பொழுது திங்கள் கிழமை (21.11.2022) முதல் இவர் மன்னார் மாவட்டத்துக்கு புதிய உதவித் தேர்தல் ஆணையாளராக தனது கடமையை பொறுப்பெற்றுள்ளார்.

மன்னார் மாவட்டத்துக்கு புதிய உதவித் தேர்தல் ஆணையாளராக  வே. சிவராசா நியமனம்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)