மட்டக்களப்பில் “மனுஷி” நூல் வெளியீடு

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும், தற்போது புலம் பெயர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டில் தமிழ் இலக்கியத்தளத்தில் இயங்கிவருபவருமான சண். தவராஜாவின் “மனுஷி” சிறுகதை நூல் வெளியீடும், அறிமுக நிகழ்வும் மட்டக்களப்பில் இடம்பெறவிருக்கின்றது.

மட்டக்களப்பு மகுடம் கலை, இலக்கிய வட்டத்தின் பௌர்ணமி கலை, இலக்கிய நிகழ்வின் 47 ஆவது தொடராக எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி இந்த நூல் வெளியீடும், அறிமுக நிகழ்வும் நடைபெற விருக்கின்றது.

பிரபல இலக்கிய கர்த்தா பேராசிரியர் செ. யோகராசா தலைமையில் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.

மகுடம் வி. மைக்கல் கொலினின் வரவேற்புரையுடன் இடம்பெறவிருக்கும் இந்த வெளியீட்டு விழா நிகழ்வில், கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா. செல்வராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார்.

மேலும் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. ரூபி வலண்டினா பிரான்சிஸ், நூல் நயவுரையாற்றுவதுடன், ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் கவிதாயினி திருமதி. சுதாகரி மணிவண்ணன் சிறப்புரையும் ஆற்றுவர்.

மூத்த எழுத்தாளர்களான எஸ்.எல்.எம். ஹனீபா, கவிஞர் செ. குணரத்தினம், கவிஞர். அ.ச. பாய்வா ஆகியோர் “மனுஷி முதன்மைப் பிரதிகளைப் பெற்றுக் கொள்வதுடன்,

நூலாசிரியர் சண். தவராஜா சுவிட்சர்லாந்திலிருந்து ஸூம் தொழில்நுட்பம் மூலம் ஏற்புரையும் ஆற்றுவார்.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் இ. தேவஅதிரன் நிகழ்வின் இறுதியில் நன்றியுரையாற்றுவார்.

மனுஷி நூலின் பதிப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் நூல் பற்றியும், நூலாசிரியர் பற்றியும் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“மனிதர்களை நேசிக்கும் சமூக செயற்பாட்டாளர் சண். தவராஜா தமிழ் ஈழத்தலிருந்து புலம் பெயர்ந்து தற்பொழுது சுவிட்சர்லாந்து நாட்டில் தமிழ் இலக்கியத் தளத்தில் இயங்கி வருகிறார்.

அரசியல் கட்டுரைகள் மூலமாகசிறந்த எழுத்தாளராக அறியப்பட்ட இவர் தற்போது சிறுகதைகள் மூலம் தன்னை சிறுகதை எழுத்தாளனாகவும் அடையாளப்படுத்த வருகின்றார்.

மனுஷி என்ற இச் சிறுகதை நூலின் மூலம் மனித வாழ்வியலின் துயரம், மகிழ்ச்சி என எல்லாவற்றையும் படம் பிடித்துக்காட்டுகிறார்.

ஈழத்தின் போராட்டகாலச் சூழலின் உண்மைத்துவத்தின் பதிவுகளாகக் கதைகளை வடிவமைத்திருக்கிறார்.

இந்த நூலில் உள்ளவை கதைகள் என்பதை விடவும் வரலாற்றுப் பதிவுகள் என்றே சொல்ல வேண்டும்.

படைப்பிலக்கியம் என்பது அனுபவத்தின் வெளிப்பாடு என தனது உரையில் சண். தவராஜா குறிப்பிடுவது போல், தனது அனுபவங்களையே சிறுகதைகளாக்கியிருப்பது சிறுகதைகளுக்கான தனித்துவத்தைப் பெறுகிறது இந்த மனுஷி - இவ்வாறு குறிப்பிட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் “மனுஷி” நூல் வெளியீடு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)