மகளை வற்புறுத்திய பெற்றோர் கைது

53 வயது நபரை திருமணம் செய்யுமாறு 15 வயது சிறுமியை வற்புறுத்தியதுடன், அந்த சிறுமியை அவருடன் நிர்வாணமாக காணொலி மூலம் கதைக்குமாறு வற்புறுத்திய பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த அவல சம்பவம் அச்சுவேலியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் அறிய வருவதாவது,

பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த 20 வயது இளைஞருடன் 15 வயது சிறுமி ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் தலைமறைவாகியிருந்தார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த இளைஞரையும் சிறுமியையும் பொலிஸார் கைது செய்தனர். சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து சிறுமி சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், அதிகாரிகள் சிறுமியிடம் முன்னெடுத்த விசாரணையில் “எனது பெற்றோர் நெதர்லாந்து நாட்டில் வசிக்கும் 53 வயது நபரை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி தாக்கினார்கள். அவருடன் ‘வீடியோ கோல்’ மூலம் உரையாடுமாறு வற்புறுத்தினார்கள். அவர், என்னை நிர்வாணமாக வீடியோ கோலில் உரையாடுமாறு கூறினார். அதற்கு நான் மறுத்தேன். அது தொடர்பில் பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள், அவருடன் அவ்வாறு உரையாடுமாறு வற்புத்தினார்கள்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோரை கைது செய்த பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மகளை வற்புறுத்திய பெற்றோர் கைது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)