புதிய வேந்தர் நியமனம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக இலங்கையின் முன்னணி ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐந்து வருட காலத்திற்கென இந்த வேந்தர் பதவி நியமனத்தை வழங்கியுள்ளார்.

இலங்கையின் பிரபல சட்ட மேதையான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, இலங்கையின் ஐக்கிய இராஜ்ஜியதிற்கான உயர்ஸ்தானிகராகவும் ஏற்கனவே இருந்துள்ளார்.

மேலும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர்களாக முன்னர் தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில், பேராசிரியர் ஏ.எம். இஸ்ஹாக் ஆகியோரும் நியமனம் பெற்றிருந்தமையும் குறிப்பிடதக்கது.

இந்நிலையில் புதிய வேந்தராக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளமையை பலரும் வரவேற்றுள்ளதுடன், பாராட்டுக்களையும் தெரிவித்த வண்ணமுள்ளனர்.

குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் அதிலும் தென்கிழக்கு வாழ் மக்கள் புதிய வேந்தரின் நியமனத்தை பெரிதும் வரவேற்றுள்ளதுடன், பெரு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் எண்ணக்கருவிலும், அவரது அயராப் பெருமுயற்சியாலும் உருவாக்கப்பட்ட இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் இன்று தேசிய பல்கலைக்கழகமாக பல்வேறு சாதனைகளுடன் முன்னேற்றப்பாதையில் வீறு நடைபோட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

புதிய வேந்தர் நியமனம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)