
posted 6th November 2022
அபிவிருத்தி குழு கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் (இராஜாங்க அமைச்சர் சிவனேச துறை சந்திரகாந்தன்) துணை போகின்றார் – சாணக்கியன்!
அபிவிருத்தி குழு கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் துணை போகின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடாத்தாமல், 03.11.2022 அன்றைய தினம் வாகரை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் மாத்திரமே நடாத்தப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நடாத்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தான் ஒரு சதி நடவடிக்கையாகவே பார்ப்பதாகவும், குறிப்பாக வாகரையினை முற்றாக அரசாங்கத்திற்கு தாரை வார்ப்பதற்குரிய நடவடிக்கைகள் திரைமறைவில் முன்னெடுக்கப்படுவதாகவும் இரா. சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டுக்களை பகிரங்கமாக முன்வைத்துள்ளார்.
குறிப்பாக வாகரையில் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் காணிகளை வழங்கும் திட்டங்களில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேபோன்று சேதனப்பசளை என்ற பெயரில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாகவும், இதற்கும் பிள்ளையான் துணை போகின்றார் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், அபிவிருத்திக்குழு கூட்டங்களுக்கான அறிவிப்புகள் தங்களுக்கு முறையாக விடுக்கப்படுவதில்லை எனவும் இரா. சாணக்கியன் இதன்போது விசனம் வெளியிட்டுள்ளார்.
தான் இந்த கூட்டங்களில் பங்கேற்கக்கூடாது என்ற எண்ணத்திலேயே தனக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
எனினும், எந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் தான் குரல் கொடுக்க பின்னிற்கப்போவதில் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY