
posted 18th November 2022
இளம் சமூகம் இப்பொழுது திசைமாறிச் செல்வதால் அவர்களை ஒன்றிணைத்து நல்ல பண்பாடுகளையும் ஆன்மீகத்திலும் ஈடுபாடு கொண்டவர்களாக வளர்த்தெடுக்க நாம் முனைய வேண்டும். பிள்ளைகள் குற்றம் செய்தால் தண்டிக்காது கண்டித்து வளர்க்க வேண்டும் என வடக்கு மாகாண கல்வி , பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.இ. வரதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட செயலகமும், மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரனையில் புதன்கிழமை (16.11.2022) நடாத்திய விழாவில் 'மன்னெழில் -11' மலர் வெளியீடும் 2022ம் ஆண்டுக்கான கலைஞர் மற்றும் ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு விழாவும் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்து கொண்ட பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.இ. வரதீஸ்வரன் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
இங்கு மன்னார் மாவட்ட மக்களைப்பற்றி நல்ல பதிவை எனக்கு முன் பேசியவர்கள் வைத்துச் சென்றனர். நானும் அதைத்தான் இங்கு பதிவிடுகின்றேன். மன்னார் மக்கள் வருவோரை நன்கு உபசரிக்கும் பண்பைக் கொண்டவர்கள்.
எமக்கு தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ நாம் அவர்களை காணும்பொழுது ஒரு புண்முறுவல் செய்வோமானால் அதுவே ஒரு பெரிய பண்பாடாக இருக்கும்.
யுத்த சூழ்நிலை காலத்தில் நான் இங்கு கடமையாற்றினேன். வர்த்தக நிலையங்கள் இல்லாத நேரத்திலும், அந்த சூழ்நிலையிலும் இங்குள்ள மக்கள் எங்களை நன்கு பராமரிப்பும் பண்பை கொண்டிருந்தனர்.
இதனால் நீண்ட காலம் நான் இந்த மண்ணில் சேவையாற்றுவதற்கு என்னை அர்ப்பணித்திருந்தேன். இதை நான் இங்கு மட்டும் சொல்லவில்லை. யாழ் பகுதியிலும் மன்னார் மக்களின் நல்ல பண்பை பறைசாற்றி வருகின்றேன்.
இந்த பண்புகளை தொடர்ந்து இங்குள்ள பிள்ளைகளுக்கும் பழக்கிக்கொள்ள வேண்டும். இப்பொழுதுள்ள சமூகம் திசைமாறி செல்லும் நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றார்கள்.
சில பெற்றோர் மார்தட்டி சொல்லுவார்கள் நான் எனது பிள்ளையை ஒருநாளும் ஏசவோ கண்டிக்கவோ மாட்டேன். இது பெரும் தவறு.
அந்த காலத்தில் நாங்கள் குற்றம் செய்தால் தண்டிக்கப்பட்டவர்கள். அடி வாங்கியவர்கள். ஆனால் இந்த நிலை இப்பொழுது இல்லை.
பிள்ளைகள் குற்றம் செய்தால் தண்டிக்காது கண்டித்து வளர்க்க வேண்டும். பிள்ளைகளுக்கு யாராவது நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். இல்லையேல் ஒரு பிள்ளை தானாக அதை பழகிக் கொள்ளாது.
இதனால்தான் இன்றைய பிள்ளைகள் தவறான வழிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றார்கள்.
நல்லதை சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களைப் பாருங்கள். அவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லும்போது தாடி வளர்த்து செல்லும்போது மாணவர்கள் அதற்கு ஒத்தமாதிரி தலைமுடியை மாற்றி அமைத்துச் செல்லுகின்றனர்.
எந்த பெரிய நிலையிலிருந்தாலும் ஒருவர் ஆசிரியரிடம் கற்றுத்தான் வரவேண்டும். இதனால்தான் ஆசிரியர்களுக்கு பெருமை உண்டு.
ஆசிரியர் பெரியோருக்கு மதிக்கும் பண்பை நாம் எமது பிள்ளைகளுக்கும் சிறு வயதிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும்.
பெரியவர்களாக பிள்ளைகள் வளர்ந்து விட்டால் பின் நாம் இவர்களை நல்ல பண்பாட்டுக்கு வளர்த்தெடுப்பது கடினமாகி விடும்.
இன்று மூத்த கலைஞர்கள் வளரும் கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்படுகின்றனர். இது இங்கு ஒரு சிறப்பாக அமைந்துள்ளது.
பஞ்சம் வரலாம். படைகள் ஆக்கிரமிக்கலாம் எங்கள் நெஞ்சம் மறக்காது. எமது பண்பாடு மறையக்கூடாது.
எமது இளைஞர்கள் திசைமாறிச் செல்லுவதால் அனைவரையும் ஒன்றிணையுங்கள். கலைஞர்களாக உருவாக்குங்கள். அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஆன்மீகத்தில் அவர்களை நாம் வளர்த்தெடுக்க வேண்டும் என இவ்வாறு வேண்டிக் கொண்டார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)