
posted 5th November 2022
“மத்தியஸ்த எண்ணகருவை வலுப்படுத்தி பிணக்குகளை பாடசாலை கட்டமைப்புக்குள் தீர்த்துக் கொள்ளும் திறன்கள், ஆளுமைகளை உருவாக்கும் நோக்குடனேயே பாடசாலை மத்தியஸ்த சபைகள் உருவாக்கப்படுகின்றன.”
இவ்வாறு, நிந்தவூர் பிரதேச செயலக, மத்தியஸ்த சபைக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பாத்திமா சாமிலா கூறினார்.
நிந்தவூர் அல் - மதீனா வித்தியாலய (தேசியப் பாடசாலை) உயர்தர வகுப்பு மாணவர்களுக்கென நடைபெற்ற பாடசாலை மத்தியஸ்த்தம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வுக்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.எல்.எம். நிஹாறுடீன், உளவளவத்துணைபொறுப்பாளர் எம். றூகுல்லா, ஒழுக்காற்று குழு பொறுப்பாளர் எம்.ஏ. ஜெசீர் அலி பகுதித்தலைவர் எம்.எச்.எம். ஹரீஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
மேலும் செயலமர்வில் மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோத்தர்களான எம்.எச்.எம். இம்திசா (கல்முனை) ஏ.எல். றினோஸா (சம்மாந்துறை) ஆகியோருடன் பத்திமா சாமிலாவும் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர் (மத்தியஸ்த சபை) பாத்திமா சாமிலா தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“சமூகத்தில் எழுந்து கொண்டிருக்கும் அனேகமான பிணக்குகளை சுமுகமாகத் தீர்த்து வைப்பதில் மத்தியஸ்த சபைகள் பெரும்பங்காற்றிவருகின்றன.
இந்த வகையில் அகில இலங்கை ரீதியிலான மத்தியஸ்த சபைகளின் முக்கிய வகிபாகத்தின் வெற்றிகர செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கவையாகும்.
இந்த முன்மாதிரி செயற்பாட்டை அடியொற்றியும், எதிர்கால சமூகத்தின் நற்பிரஜைகளான மாணவ சமூகத்தினரிடையேயும் மத்தியஸ்தவாண்மையை வளர்க்கவும், அத்தகைய எண்ணக் கருவை வலுப்படுத்தும் வகையிலும் பாடசாலை மத்தியஸ்த சபைகள் ஸ்தாபிக்கப்படுகின்றன.
இதனடிப்படையில் மத்தியஸ்த எண்ணக்கருக்கவை பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தி வலுவூட்டும் செயற்பாடாக மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு இத்தகைய செயலமர்வுகளை நடத்தும் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
பாடசாலைக் கட்டமைப்பிற்குள் மாணவர்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகளை மாணவர்களாகவே சமரசமாகத் தீர்த்துக்கொள்ளும் திறன்கள் இதன் மூலம் வளர்க்கப்பட்டு, அத்தகைய திறன்கள் கொண்ட தலைவமைத்துவங்களாக மாணவர்களை உருவாக்கவும் இதன் மூலம் வாய்ப்புக்கள்கிடைக்கின்றன.
பிணக்குகள் ஏற்படுவதற்கு அடிப்படைகளாக அமைகின்ற காரணிகளை அடையாளம் கண்டு தீர்வொன்றினை நோக்கிச் செல்வதற்காக மூன்றாம் தரப்பின் உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் செயன்முறையே மத்திய ஸ்தமாக அமைகின்றது.
பிணக்குக்குத் தீர்வு, மனதுக்கு நிம்மதி என்பது இதன் தாத் பரியமாகும்” எனக் கூறினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)