பலவகைச் செய்தித் துணுக்குகள்

பண மோசடிக் குழு கைது

இலங்கை நாணயத்துக்கு, டொலரை மாற்றித் தருவதாகக் கூறி, நபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட குழுவொன்று, யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.

33 முதல் 53 வயதுக்கு இடைப்பட்ட குறித்த நான்கு சந்தேநபர்களும், திருகோணமலை, தலவாக்கலை மற்றும் அநுராதபுரம் முதலான பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர் என பொலிஸ் குறிப்பிட்டுள்ளது.

மோட்டார் வாகன உதிரிப்பாகங்களை, குறைந்த விலைக்கு பெற்றுத் தருவதாகக் கூறி, அதற்கான பணத்தை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டுவருமாறு அறிவித்து, பின்னர் குறித்த நபர்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரிடம், 25 இலட்சம் ரூபா மற்றும் 18 இலட்சம் ரூபா பணம் அவர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது. அத்துடன், காலியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம், 10 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவையும் குறித்த குழுவினர் கொள்ளையிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று முன் தினம் கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அவர்களின் உடைமையிலிருது 825 அமெரிக்க டொலரும், 28 இலட்சம் ரூபாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஏழாலையில் வன்முறை - தீக்கிரையாக்கப்பட்ட வீடு

ஏழாலையில் நேற்று (10) 4 பேர் கொண்ட வன்முறை குழு ஒன்று வீடு ஒன்றை தீக்கிரையாக்கின. 15 வயது சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியே இளைஞர் ஒருவர் இந்த செயலை செய்தார் என்று கூறப்படுகின்றது.

நேற்று முன்தினம் அந்த வீட்டுக்குள் புகுந்த நால்வர் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி தீ வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

தீ வீடு முழுவதும் பரவியதில் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகின.

தீக்கிரையாக்கப்பட்ட வீட்டில் வசிக்கும் 15 வயதான சிறுமியை தனக்கு திருமணம் செய்து தருமாறு இளைஞர் ஒருவர் வற்புறுத்தி வந்தார் என்றும், இதற்கு வீட்டார் சம்மதிக்காத நிலையில், இளைஞன் குழு ஒன்றின் மூலமாக வீட்டாருக்கு அச்சுறுத்தல்கள் விடுத்து வந்துள்ளார். இந்நிலையிலேயே அந்த வீடும் தீக்கிரையாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சீரற்ற காலநிலை சின்னாபின்னமான குடும்பங்கள்

யாழ் மாவட்டத்தில் காணப்படுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 24 மணித்தியாலத்தில் 305 குடும்பங்களை சேர்ந்த1025 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடானது பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

கரவெட்டி, யாழ்ப்பாணம், பருத்தித் துறை, மருதங்கனி மற்றும் சாவச்சேரி பிரதேச செயலர் பிரிவுகளில் பாதிப்புகள் கூடுதலாக உணரப்பட்டுள்ளது

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் கூடுதலான பாதிப்பாக 201 குடும்பங்களைச் சேர்ந்த 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடுபொலிகண்டி பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெயர்ந்த 14 குடும்பங்களை சேர்ந்த 46 பேர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள்.

மருதங்கணி பிரதேச செயலர் பிரிவில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 72 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 54 குடும்பங்களை சேர்ந்த 171 பேரும் வெள்ளம் காரணமாக பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குரிய சமைத்த உணவு மற்றும் தங்குமிடவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

போலி உறுதி - காணி விற்பனை - அதிபர் உட்பட 9 பேர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குள் போலி உறுதி மூலம் காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணி, பாடசாலை ஒன்றின் முன்னாள் அதிபர் உட்பட 9 பேரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் திருமதி நளினி சுபாஸ்கரன் நேற்று கட்டளை பிறப்பித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர அராலி வீதி - பொம்மைவெளியில் உள்ள காணி ஒன்றின் உரிமையாளர்கள் இறந்த நிலையில், அவர்களின் போலி கையொப்பங்கள் மூலம் பொய்யான ஆவணங்களை தயாரித்து அந்தக் காணி விற்பனை செய்யப்பட்டது.

இது தொடர்பில் யாழ். குற்றவியல் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. விசாரணை நடத்திய பொலிஸார் ஒருவரை சந்தேக நபராக மன்றில் முற்படுத்தினர். இந்த வழக்குடன் தொடர்புடைய ஏனையவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் பேரில், உறுதியை முடித்துக் கொடுத்த சட்டத்தரணி மற்றும் யாழ். நகரின் பிரபல பாடசாலை ஒன்றின் முன்னாள் அதிபர் ஆகியோர் உட்பட 9 சந்தேகநபர்கள் நேற்று (10) நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்கள் 15 சட்டத்தரணிகள் மன்றில் வாதங்களை முன்வைத்தனர். அத்துடன், பிணையும் கோரினர்.

விசாரணை முடிவடையாத நிலையில் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றைக் கோரினர்.

இரு தரப்பு விவாதங்களை தொடர்ந்து சந்தேக நபர்களை 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை அன்றைய தினத்துக்கு தவணையிட்டும் கட்டளை பிறப்பித்தார்.

கணவன் - மனைவி தர்க்கம் - சடலமாக தாயும், சிசுவும் மீட்பு

தென்மராட்சி - மிருசுவிலில் வீடு ஒன்றின் கிணற்றிலிருந்து தாயும், கைக்குழந்தை ஒன்றும் சடலங்களாக வெள்ளிக் கிழமை (11) மீட்கப்பட்டனர். சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் இரவு கணவனும், மனைவியும் தர்க்கப்பட்டனர் என்றும், இதைத் தொடர்ந்து மனைவியையும் குழந்தையையும் காணவில்லை எனவும் பின்னர் இருவரும் கிணற்றில் சடலங்களாகக் காணப்பட்டனர் என்றும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பெண்ணின் கணவரை பொலிஸார் கைது செய்தனர்.

நேற்றைய தினம், சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் அ. ஜுட்சன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தார். அத்துடன், சடலங்களை உடல்கூராய்வுக்காக மருத்துவமனையில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.

கொடிகாமம் பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)