பலவகைச் செய்தித் துணுக்குகள் - வழிப்பறி கொள்ளைகள்

அதிகரிக்கும் வழிபறிக் கொள்ளைகள்

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்துள்ள நிலையில் , இருவேறு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுவில் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர், வீதியில் சென்ற பெண்ணொருவரின் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி, மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறிக் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இளவாலை பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனை கைது செய்துள்ளனர்.

அதேவேளை, கொடிகாமம் பொலிஸ் பிரிவிக்கு உட்பட்ட அல்லாரைப் பகுதியில் பெண்ணொருவரின் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர், பல கொள்ளை மற்றும் களவு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.



மரநடுகையை மேற்கொள்ளுங்கள் - சமன் பந்துலசேன

மர நடுகை மாதத்தை முன்னிட்டு வடமாகாண சபைக்குட்பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்களில் மரநடுகையை மேற்கொள்ளுமாறு வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன அறிவித்துள்ளார்.

இதற்கான சுற்றறிக்கையை வடமாகாணசபைக்குட்பட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகளிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அமைச்சுக்கள், திணைக்களங்கள், பிரிவு அலுவலகங்களில் தலா 50 மரங்களை நடுமாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலுப்பை, மருதம், புங்கை, பலா போன்ற மரங்களுக்கு முன்னுரிமையளிக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வடமாகாணசபையின் விவசாய அமைச்சராக பொ. ஐங்கரநேசன் பதவிவகித்த காலப்பகுதியில், கார்த்திகை மர நடுகை மாத தீர்மானம் வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கான முழுமையான முயற்சியை பொ.ஐங்கரநேசன் மேற்கொண்டிருந்தார்.

கார்த்திகை மாத மரநடுகை திட்டம் பெருமெடுப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், மாகாணசபை சர்ச்சையையடுத்து புதிதாக பதவியேற்ற விவசாய அமைச்சர் க. சிவநேசன் அதில் ஆர்வம் காட்டவில்லையென குறிப்பிடப்பட்டது. அதனால் அது படிப்படியாக செயலற்று சென்றது.

வடமாகாணசபை ஆட்சிக் காலம் முடிந்ததும், அதிகாரிகள் அதைப்பற்றி அக்கறை காண்பிக்கவில்லை. எனினும், பொ. ஐங்கரநேசனின் தமிழ் தேசிய பசுமை இயக்கம் கார்த்திகை மரநடுகை மாத திட்டத்தை சமூக மட்டத்தில் செயற்படுத்தி வந்தது.

இந்த நிலையில், தற்போதைய வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண சபை தீர்மானமான மரநடுகை திட்டத்தைச் செயற்படுத்த பணிப்புரை விடுத்துள்ளார்.



ஹெரோயின் பாவணை சந்தேக நபர்கள் கைது

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உயிர்கொல்லி ஹெரோயின் பாவணை இடம்பெறுவதாக பளை பொலிசாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேக நபர்களின் வீட்டை சுற்றிவளைத்த பளை பொலீசார் 600 மில்லி கிராம் உயிர்கொல்லியான ஹெரோயினுடன் 05 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, தர்மபுரம், பளை தம்பகாமம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

கைதானவர்களை இன்று (10) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாகவும் பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.


பலவகைச் செய்தித் துணுக்குகள் - வழிப்பறி கொள்ளைகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)