படுமோச நிலையில் வீதி

நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள முக்கிய வீதிகளுள் ஒன்றான 2 ஆம் குறுக்குத் தெரு மஸ்ஜித்துன் நூர் பகுதியின் படுமோச நிலை குறித்து பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதிக்குச் செல்லும் இந்த முக்கிய வீதியில் அலியார் சந்தி முதல் குறிப்பிட்ட தூரம் வரை பள்ளம் படு குழிகள் நிறைந்து படுமோசனமான நிலையில் நீண்டகாலமாகக் காணப்படுகின்றது.

தினமும் அட்டப்பள்ளம், சர்வோதய சமாதான கிராமம், மற்றும் சக்காத் கிராமம் போன்ற பகுதிகளுக்கு இந்த வீதி யூடாக பெருமளவு மக்கள் பயணம் செய்வதுடன், நெற்காணிகளுக்குச் செல்லும் விவசாயிகள், பாடசாலை மாணவர்களும் இவ்வீதியால் பெரும் அசௌகரியங்களுடன் பயணிக்க வேண்டிய அவலமும் நீடித்து வருகின்றது.

கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பராமரிப்பிலுள்ள இந்த வீதி யில் மழை காலங்களில் நீர் தேங்கி நிற்கும் நிலையுமுள்ளது.

இந்த வீதியின் அவலம் குறித்தும் இதனால் மக்களுக்க ஏற்பட்டுவரும் அசௌகரியங்கள் குறித்தும் அண்மையில் நடைபெற்ற நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்திலும் உறுப்பினர்களால் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இந்த வீதியை தாமதமின்றி செப்பனிட்டு மக்களின் அவலம் தீர்க்க கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்களம் முன்வருமா? எனப்பலரும் அங்கலாய்க்கின்றனர்.

படுமோச நிலையில் வீதி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)