நிந்தவூர் இராணுவ முகாமை இடமாற்றுக

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நிந்தவூரில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட இராணுவ முகாமை உரிய இடத்திலிருந்து அகற்றித்தருமாறு ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹஸன் அலி ஜனாதிபதியைக் கோரியுள்ளார்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பாடசாலை, புனித இடங்கள் போன்ற இடங்களில் படையினர் இருப்பதன் காரணமாக மக்களுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பதாக பல தரப்பினராலும் சுட்டிக் காகாட்டப்பட்டுள்ளதால் அது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்து அந்த இடங்கள் சுதந்திரப் பகுதிகளாக அறிவிக்கப்படவேண்டும் என்ற வேண்டுகோளை ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ள இவ்வேளையில், நிந்தவூர் பிரதான ஜும்மாபள்ளிக்கு முன்னால் செயல்பட்டு வரும் குறித்த இராணுவ பாதுகாப்புப் படை முகாமை பிறிதொரு இடத்திற்கு துரிதமாக மாற்றித்தருமாறு மின்னஞ்சல் மூலம் அவர் ஜனாதிபதியிடம் வேண்டுகோளை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹஸன் அலி இந்த அவசர வேண்டுகோளை விடுத்து பின்வருமாறு தெரியப்படுத்தியுள்ளார்.

தமது கிராமத்தில் பொதுமக்கள் திரளாக கூடும் மையப்பகுதியாக அமைந்துள்ள இந்த இடத்தில் ஒரு இராணுவ கண்காணிப்பு வலயம் தற்காலிக ஏற்பாடாக ஆரம்பத்தில் தொடங்கப்பட்டு தற்போது படிப்படியாக காவல் அரண்களுடன் நிரந்தர வசதிகளுடன் வளர்ந்து வருவதையிட்டு பொதுமக்கள் அதிருப்தியுடன் முறையிட்டு வருகின்றனர். நிந்தவூர் பிரதான ஜும்மாபள்ளி வளாகத்திற்கும் நிந்தவூர் பிரதான தெருவுக்கும் இடையிலுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான இந்த சிறிய இடப்பரப்பில் ஏற்கனவே பொது நூல் நிலையமும் அமைந்துள்ளதனால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, பொதுமக்களின் வசதியையும், நிம்மதியையும் கருத்தில் கொண்டு வளர்ந்து வரும் இந்த இராணுவ காவல் நிலையத்தை வேறு பொருத்தமான, பாடசாலைகள், வணக்க ஸ்தலங்கள் மற்றும் மக்கள் ஒன்று கூடும் இடங்கள் தவிர்ந்த பகுதிகளில் அமைத்துக்கொள்ளுமாறு வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக எமது கரையோர பிரதேசங்களில் ஏற்கனவே போலிஸ் பாதுகாப்பு காலாகாலமாக செயல்பட்டு சுமூகமாக இயங்கி வருவதனால் இவ்வாறான இராணுவ கெடுபிடிகள் அகற்றப்படுவது சாலச்சிறந்தது என்பது எனது அபிப்பிராயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிந்தவூர் இராணுவ முகாமை இடமாற்றுக

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)