
posted 21st November 2022
எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மாவீரர் துயிலுமில்லங்கள் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்றைய தினம் (21) நினைவேந்தல் ஏற்பாட்டுப் பொதுக்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் வாகரை கண்டலடி துயிலுமில்லம் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது பொது மக்கள் நினைவேந்தல் ஏற்பாட்டுப் பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர்கள், பிரதேச பொதுமக்கள் கலந்துகொண்டு மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப் பணியினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களும் சென்று பார்வையிட்டதோடு கலந்துகொண்டார் கலந்து கொண்டார்.
அதன் போது கருத்து வெளியிட்ட அவர், மக்கள் இச் சிரமதான பணியில் மிகவும் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டிருக்கின்றனர். அத்துடன் 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போதுதான் அரசாங்கம் இணக்கம் தெரவித்துள்ளனர்; பச்சைக் கொடி ஒன்றினை காட்டியுள்ளனர். இருந்த போதிலும் எமக்கான உரிமைகளில் இதுவும் ஒன்று. எமது அரசியல் உரிமைக்காக எமது விடுதலைக்காக போராடியவர்களை அவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உணர்வு பூர்வமாக நினைவு கூரும் இந் நிகழ்வானது எதிர்வரும் காலங்களில் எவரிடமும் அனுமதி கூறி செயல்படுத்தும் நிகழ்வாக இருக்ககூடாது என்று தெரிவித்தார். எமக்கான உரிமை எமது சுதந்திரத்தினை அரசு கட்டுப்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)