சமஷ்டி எனக்கூறி இனஅழிப்பை மூடிமறைப்பதற்கு இடமளிக்க முடியாது

தமிழ்க் கட்சிகளை பேச்சுவாா்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்திருக்கின்றாா். தமிழ்க் கட்சிகளும் பேச்சுவாா்த்தைகளுக்குத் தம்மைத் தயாா்படுத்துகின்றன. சமஷ்டி என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்திருக்கின்றது. இருந்த போதிலும், சமஷ்டி எனக்கூறி இன அழிப்பை மூடிமறைப்பதற்கோ, சா்வதேச நீதி கோரலை பலவீனப்படுத்துவதற்கோ இடமளிக்க முடியாது - என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழரின் உறவினர் அமைப்பால் வெள்ளிக்கிழமை (18) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்தி குறிப்பிலையே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளனர்

அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர் பிரச்சினை, அரசியல் கைதிகள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்க் கட்சிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பை எச்சரிக்கையுடனேயே பாா்க்கவேண்டியிருக்கின்றது. இலங்கை தற்போது எதிா்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில் இவ்வாறான அழைப்பை விடுக்க வேண்டிய நிா்ப்பந்தம் ரணில் அரசுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

அதாவது, தனது நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கும், சா்வதேச அழுத்தங்களை எதிா்கொள்வதற்குமான ஒரு உபாயமாகவே ஜனாதிபதி இந்தப் பேச்சுக்களைப் பயன்படுத்துவாா் என்பதில் சந்தேகமில்லை. அதனால், தமிழ்த் தரப்புக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனேயே இவ்விடயத்தைக் கையாள வேண்டும்.

ஜனாதிபதியின் அழைப்பை பிரதான தமிழ்க் கட்சிகள் உடனடியாகவே வரவேற்றுள்ளன. சமஷ்டி முறையிலான தீா்வு ஒன்றுக்கான கோரிக்கையை முன்வைத்து பேசப்போவதாக தமிழரசுக் கட்சியின் சாா்பில் அதன் பேச்சாளா் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருக்கின்றாா். இதற்கான ஆலோசனைக்கு ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கும் அவா் அழைப்பு விடுத்திருக்கின்றாா்.

தற்போதுள்ள நிலையில் ஜனாதிபதியின் அழைப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. பொருளாதார நெருக்கடி, சா்வதேச அழுத்தங்கள், புலம்பெயா்ந்த தமிழா்களின் முதலீட்டை அரசாங்கம் எதிா்பாா்த்திருப்பது போன்ற தமிழ்த் தரப்பின் பேரம்பேசும் பலத்தை அதிகரித்திருக்கின்றது. இந்த நிலையில், சமஷ்டி என்ற கோரிக்கையை முன்வைப்பது அவசியமானதும், நியாயமானதும்தான்.

ஆனால், சமஷ்டி எனக் கூறிக் கொண்டு இன அழிப்பை மூடிமறைக்க இடமளிக்கக்கூடாது. அதேபோல சா்வதேச நீதி கோரும் விடயத்திலும் விட்டுக் கொடுப்புக்கள் இருக்க முடியாது. இன அழிப்பு யுத்தம் முடிவடைந்து 13 வருட காலத்தில் கூட்டமைப்பால் எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீா்வைப் பெற்றுக்கொள்வதில், தமிழ்க் கட்சிகள் நிதானமாகவும், தீா்க்கதரிசனத்துடனும் செயற்படவேண்டும்.

சமஷ்டி என்பதை ஏற்க முடியாது என்பதை ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்திருந்தாா். அதனால், ஜனாதிபதியிடமிருந்து எந்த விதமான உத்தரவாதத்தையும் பெறாமல் பேச்சுக்களுக்குச் செல்வது தமிழ் மக்களுக்கு பாதகமாகவே அமையும். கடந்த காலங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்குத் துணைபோனது.

இன அழிப்பை மூடி மறைப்பதற்கும், தமிழ் மக்களுக்கான நீதிக்கான போராட்டத்தை மழுங்கடிப்பதற்கும் இந்தப் பேச்சுக்களைப் பயன்படுத்த அரசாங்கம் முற்படும். இதுதான் கடந்த காலங்களிலும் நடைபெற்றது. அதனால், இவ்விடயத்தில் தமிழ்த் தரப்புக்கள் எச்சரிக்கையுடன் செயற்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்

சமஷ்டி எனக்கூறி இனஅழிப்பை மூடிமறைப்பதற்கு இடமளிக்க முடியாது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY