
posted 7th November 2022
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு கோரிய நூறு நாட்கள் செயல் முனைவின் நூறாவது நாள் மக்கள் பிரகடனம் நாளை 8 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் இந்த பிரகடன நிகழ்வு இடம்பெறவுள்ளதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கண்டு மணிலவகுசராசா தெரிவித்துள்ளார்.
“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல் முனைவுடைய மக்கள் குரலானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் சுழற்சி முறையில், கடந்த ஆவணி முதலாம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது.
இதன் நூறாவது நாள் நிறைவிலேயே இன்றைய தினம் மேற்படி மக்கள் பிரகடனம் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இதன்படி யாழ் மாவட்டத்தில் நல்லூர் சங்கிலியன் பூங்கா, அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச பூங்கா, கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் சந்தி இளைஞர் மட்டம் விளையாட்டு மைதானம், மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னா முனை, மட்- புனித சூசையப்பர் கல்லூரி விளையாட்டு மைதானம், வவுனியா மாவட்த்தில் வவுனியா நகரசபை மைதானம், திருகோணமலை மாவட்டத்தில், முத்தவெளி வெளியரங்கு, முல்லைத்தீவு மாட்டத்தில் கரைத்துறைப்பற்று பிரதேச சபை விளையாட்டு மைதானம், மன்னார் மாவட்டத்தில் மன்னார் பொது விளையாட்டரங்கு என்பவற்றில் பிரகடன ஒன்று கூடல்கள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை இன்றைய புரையோடிக் கிடக்கின்ற தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான “சமஷ்டி அரசியல் தீர்வு” வேண்டிய மக்கள் பிரகடனம் தொடர்பில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் கண்டு மணிலவகுசராசா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவுடைய மக்கள் குரலானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் இவ்வருடம் ஆவணி முதலாம் திகதி முதல் நாளை வரை நடைபெற்றுவருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.
குறிப்பாக,1948 இற்கு பின் இலங்கையில் ஆட்சிக்கு வந்த சிங்கள பெரும்பான்மை அரசுகள் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட முறையில் மேற்கொண்டு வந்த இனவாத அடிப்படையிலான அரசியல், பொருளாதார, சமூக, இன ரீதியான அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகளின் காரணமாகவே வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துள் மாகாண முறைமையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும், தமிழ் மொழியும் அரச கரும மொழியாக அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என 13வது தித்தச்சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும், திட்டமிட்ட வகையில் சிங்கள பேரினவாத சக்திகளால் 2006ல் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகு பிரிக்கப்பட்டு வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக்கப்பட்டன.
1987இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கை மூலமான 13வது திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்டு இற்றுடன் 35 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்தக் கால இடைவெளியில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதுடன் தமிழர்கள் மீது போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடர் இடப்பெயர்வு மற்றும் பலவருடகால அகதிமுகாம் வாழ்வை அனுபவித்தனர். போரினால் இருப்பிடங்களும், சொத்துக்களும், வாழ்வாதாரங்களும், மரங்கள் உட்பட முற்றாக அழிக்கப்பட்டன. பயங்கரவாதத் தடைச்சட்டதின் மூலம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இராணுவமயமாக்கம், திட்டமிட்ட முறையிலான நில அபகரிப்பு, மனித உரிமை மீறல்கள் காரணமாக பாரிய அச்சுறுத்தலை இன்றுவரையில் தமிழ் சமூகம் எதிர்கொண்டு வருகிறது.
எனவே, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக எதிர்கொண்டுவரும் அரசியல் அடக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவந்து, சுய கௌரவமுள்ள உரிமைகளுடன் கூடிய வாழ்வை வாழ்வதற்கு அடிப்படையான நிலைபேறான அரசியல் தீர்வொன்றின் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.
அந்த அடிப்படையிலேயே வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் 100 செயல்முனைவானது “வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்”எனும் மக்கள் குரலின் ஊடாக முன்வைக்கப்படும் மக்கள் பிரகடனமாகவே “ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு” என்பது அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)