
posted 14th November 2022
யாழ்ப்பாணம் - குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் விமான குண்டுவீச்சில் கொல்லப்பட்ட 9 பேரின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் ஞாயிற்றுக்கிழமை (13) அனுஷ்டிக்கப்பட்டது.
அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலியும் அதனைத் தொடர்ந்து நினைவஞ்சலி நிகழ்வும் பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றன.
இந்நிகழ்வில், விமானத் தாக்குதலில் உயிர் நீத்தவர்களின் உறவுகளால் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி நடைபெற்றது.
1993 நவம்பர் 13ஆம் திகதி இந்த ஆலயத்தின் மீது விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சில் ஆலயம் பெரும் சேதமடைந்தது. இதன்போது, ஆலயத்தில் வழிபாடாற்றிய 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுக்கு உள்ளாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)