
posted 16th November 2022
தேசிய இனப்பிரச்சினைக்கு ஓராண்டுக்குள் அரசியல்யாப்பு மூலமாகத்தீர்வு காணப்படும் என்றும், எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்பு வடக்குப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் கூறியுள்ளார் என்று ஊடகத்தகவல்கள் கூறுகின்றன.
வடக்கிலுள்ள பிரச்சினைகளாக தமிழ்க்கைதிகள் விடுதலை,காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, அபிவிருத்தி தொடர்பான பிரச்சினை என்பவற்றை ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். அப்படியென்றால் இதே பிரச்சினைகள் கிழக்கு மாகாணத்தில் இல்லையா? என்று மட்டக்களப்பு மாவட்ட. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்;
கிழக்கில் இப்பிரச்சினைகள் தீக்கப்பட்டு விட்டதாக ஜனாதிபதி கருதுகின்றாரா? இல்லை, வடக்கை மாத்திரம் முதன்மைப்படுத்துவதன் மூலம் கிழக்கு மாகாணத் தமிழர்களை ஜனாதிபதி முரண்படுத்த நினைக்கிறாரா? என்று எண்ணத் தோன்றுகின்றது. தமிழ் இனத்தவர்களைப் பிரதேச ரீதியாகப் பிரித்தாள ஜனாதிபதி நினைக்கின்றாரா? என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றுகிறது.
இன ரீதியான பிரித்தாளும் தந்திரம் மூலம் நாட்டை சீரழித்ததுபோக தற்போது பிரதேச ரீதியாக வடக்கு கிழக்கு என்று பிரித்தாள ஜனாதிபதி நினைக்கிறாரா? என்று கேட்க வேண்டியுள்ளது.ஏற்கனவே 2001களில் நோர்வே அனுசரணையுடன் விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடாத்திய காலத்தில் வன்னிப் புலிகள்,கிழக்குப் புலிகள் என்ற பிரிவினை அன்றைய காலத்தில் தோன்றியது. பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் விடுதலைப்புலிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடும் போதே விடுதலைப் புலிகள் மத்தியில் பிளவு ஏற்பட்டது. இப்பிளவு தானாக உருவானதா? உருவாக்கப்பட்டதா? என்ற எழுவினா வருகின்றது.
இப்போது அதே பாணியில் வடக்குப் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் என்பது கிழக்கைப் புறக்கணித்து விடுவது போல் அமைகின்றது. பல்லின மக்கள் வாழ்கின்ற இந்நாட்டில் சொல்லாலும்,செயலாலும் நல்லதைச் செய்ய வேண்டும். மாறாக மீண்டும் மீண்டும் பிரித்தாளும் தந்திரத்தைப் பயன்படுத்தி மேலும் மேலும் தேசிய ஐக்கியத்தினை சீர்குலைக்கக்கூடாது.
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான பிரச்சினையே இனப்பிரச்சினை என்பதை ஜனாதிபதி ரணில் அறியாதவரல்லர். அவர் ஒரு பழுத்த அரசியல்வாதி என்பதை நாமறிவோம். அப்படியானவர் வடக்கு கிழக்கு என்று வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது என்று பொறுப்புடன் கோருகின்றோம். பிரித்தாளும் தந்திரத்தால் நாடு அதல பாதாழத்தில் வீழ்ந்துள்ளது எனபதை ஜனாதிபதி ரணில் அறியாமல் இருக்க முடியாது. வடக்கு கிழக்குத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினையை வடக்கோடு மட்டுப்படுத்தி, கிழக்கு மாகாணத்தை ஜனாதிபதி புறக்கணித்து விட நினைக்கக் கூடாது. அரசியல் விசப் பரீட்சைகளால் இணக்கமான தீர்வுகளைப் பெறமுடியாது. இன்று ஜனாதிபதி செய்ய வேண்டியது பிரிந்துள்ள மக்களை ஐக்கியப்படுத்துவதற்கான நியாயமான தீர்வைக் காண்பதேயொழிய மேலும் பிளவுகளை உருவாக்குவதல்ல. நல்லாட்சிக் காலத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் முயற்சித்திருந்தார்.அது உண்மையாக இருந்தால், சமஷ்டி அடிப்படையிலான வடக்கு கிழக்கு இணைந்த தீர்வினை ஜனாதிபதி முன் வைக்க வேண்டும். மாறாக சிங்கள பௌத்த அடிப்படைவாத சிந்தனையோடு கோத்தாபயவின் உத்தரவுக்கமைவாக 15.8 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட அரசியல்யாப்பினைக் கொண்டு வர நினைக்கக் கூடாது. அந்த யாப்பு 13 வது திருத்த மாகாணசபை முறையினையே அகற்றும் நோக்கில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் பிற்போக்கான அடிப்படைவாதத் தீர்வுகளால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)