
posted 22nd November 2022

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய 2021-2022 மாகாண தமிழ் இலக்கிய விழாவில் கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, உவர் மலை விவேகாணந்தா கல்லூரி மண்டபத்தில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ ஜி. திசாநாயக்க தலைமையில் விழா நடைபெற்றது.
விழாவில் தமது நீண்ட கால ஊடக சேவைக்காக, சிரேஷ்ட ஊடகவியலாளரும் அம்பாறையைச் சேர்ந்த வருமான வஸந்த சந்திரபால, வித்தகர்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
வெளிநாட்டு, உள்நாட்டு ஊடகங்களில் பிராந்திய செய்தியாளராகத் தனது சேவையைத் தொடரும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த வசந்த சந்திரபால அம்பாறை மாவட்ட தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களின் நன்மதிப்பையும், அபிமானத்தையும் பெற்றவராவார்.
பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும், யுத்த காலத்திலும் துணிச்சலுடன் ஊடகப்பணியை முன்னெடுத்து வந்த வசந்த சந்திரபால வித்தகர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமைக்கு தென்கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் பாராட்டுக்களைத் தெரிவித்துளள்ளது.
இதேவேளை அக்கரைப்பற்றைச் சேரந்த பிராந்திய ஊடகவியலாளர் எம்.எல். சரீப்டீன் இந்த விழாவில் இளம் கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் முக்கிய உறுப்பினரான சரீப்டீன், துடிப்புடன் ஊடக சேவையாற்றிவரும் ஒருவராவார்.
ஊடகத்துறை சார்ந்த பலரும் சரீப்டீனை வெகுவாகப் பாராட்டியும், வாழ்த்துத் தெரிவித்துமுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)