அம்பாறை மாவட்டத்தில் மக்கள் பிரகடனம்

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு கோரும் மக்கள் பிரகடன நிகழ்வு அம்பாறை மாவட்டம் தழுவியதாக நேற்று (8 ஆம் திகதி) காரைதீவில் நடைபெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் அனுசரணையுடன், மேற்படி அதிகாரப் பகிர்வு கோரிய 100 நாட்கள் செயல் முனைவின் நூறாவது நாளான நேற்று வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் குறித்த மக்கள் பிரகடன நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்திற்கான பிரகடன நிகழ்வு காரைதீவு பிரதேச பூங்காவில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் துரையப்பாகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
நிழக்வில் பொத்துவில் முதல் நீலாவணை வரையிலான பிரதேச பொது மக்கள், சிவில் சமூகத்தினர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், சமயப் பெரியார்களென பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் அக வணக்கம் செலுத்தப்பட்டு, பொதுச் சுடர் ஏற்றப்பட்டதுடன், தலைமை உரையையும், வரவேற்புரையையும் இணைப்பாரளர் துரையப்பா காந்தன் நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து கொட்டும் மழைக்கு மத்தியிலும், குறித்த சமஷ்டி அரசியல் தீர்வை வலியுறுத்தும் மக்கள் பிரகடனம் வாசிக்கப்பட்டது.
அடிப்படையான நிலைபேறான அரசியல் தீர்வொன்றின் அவசியம் குறித்து இதன்போது வலியுறுத்தப்பட்டது

மேலும் நிகழ்வின் போது பிரமுகர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெய சிறில், மாணவர் மீட்பு பேரவைத் தலைவர் எஸ். கணேஷ், கல்முனை மாநகர சபை உறுப்பினர் க. சிவலிங்கம், அருட்தந்தை தேவதாஸன் ஆகியோரும் பிரசன்னமாகவிருந்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் மக்கள் பிரகடனம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)