வெள்ள நீரினை வெளியேற்றும் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் மாநகர சபை

யாழ். மாவட்டத்தில் பெய்வது வரும் கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு தாழ்நிலப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.
யாழ் நகரிலுள்ள ஸ்ரான்லி வீதி, கோவில் வீதி உட்பட பிரதான வீதிகளும், நகரை அண்டிய புறநகர்ப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

குடியிருப்புக்குள் தேங்கியுள்ள வெள்ள நீரினை வெளியேற்றும் நடவடிக்கையில், யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் பிரதேச சபையினர் கனரக வாகனங்களின் உதவியுடன் பணியாற்றினர்.

வெள்ள நீர் வழிந்தோடமுடியாதவாறு தடைப்பட்டுள்ள கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
யாழ்.மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக சங்கானை, நல்லூர் பிரதேச செயலர் பிரிவுகளில் 149 குடும்பங்களை சேர்ந்த 460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

சங்கானை மற்றும் நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாத்திரம் அனர்த்த பாதிப்பு விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சங்கானை பிரதேச செயலகப் பிரிவின் ஜே.179 கிராம சேவகர் பிரிவில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 4 குடும்பத்தினர் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனரென தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ள நீரினை வெளியேற்றும் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் மாநகர சபை

எஸ் தில்லைநாதன்