
posted 24th November 2021
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தேர்தல் முன்மொழிவுகளின் பிரகாரம் 'சுபீட்சத்தின் நோக்கு' எனும் கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சினால் கிராமிய வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிந்தவூர் இளைஞர் செயற்பாட்டாளரும், வனவிலங்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் நிந்தவூர் பிரதேசத்துக்கான இணைப்புச் செயலாளருமான ஆதம் பாசித் ஹுஸ்னியின் வேண்டுகோளுக்கிணங்க திகாமடுல்ல மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைவரும் வனவிலங்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான கௌரவ விமலவீர திசாநாயக்க அவர்களின் பரிந்துரைக்கு அமைய நிந்தவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 25 கிராம சேவகர் பிரிவுகளில் 45 வீதிகளுக்கு கொங்கிரீட் இடும் பணிகள் வனவிலங்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேகச்செயலாளர் அஞ்சன திசாநாயக்க அவர்களினால் நிந்தவூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கெளரவ இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவின் செயலாளர் டி. ராஜபக்ஷ அவர்களும், நிந்தவூர் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஏ.எம் சுல்பிகார் அவர்களும், அமைச்சரின் இணைப்பாளர்களான எஸ்.எல்.ஏ. அஸீஸ் (அட்டாளைச்சேனை),ஏ.ஆர்.எம். தெளபீக் (சம்மாந்துறை), ஏ.ரிஸ்வான் (இறக்காமம்) ஆகியோருடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிந்தவூர் கிராமிய குழுத் தலைவர்களும் பொது மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம்