
posted 22nd November 2021
கிளாலிப் பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வாள்வெட்டுக் கும்பலை குடும்பஸ்தர் தனித்து நின்று வீட்டில் இருந்த கத்தி மற்றும் மிளகாய்த்தூள் துணையுடன் விரட்டி அடித்துள்ளார்.
கிளாலிப் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருவதாவது,
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை 2 மணியளவில் வாள்கள், கைக்கோடரிகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் 10 க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய கும்பல் ஒன்று உட்புகுந்து வீட்டின் ஜன்னல்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவற்றின் கண்ணாடிகளை உடைத்தனர்.
பின்னர் வீட்டின் பிரதான கதவினை கோடாரியால் கொத்தினர். அதன்போது உசார் அடைந்த குடும்ப தலைவர் தனது மனைவி, பிள்ளைகளை அறைக்குள் வைத்து பூட்டி விட்டு, தனியாளாகத் தாக்குதலாளிகளை எதிர்கொள்ளத் துணிந்து சமையலறையில் இருந்த கத்தி மற்றும் மிளகாய் தூள் என்பவற்றால் தாக்குதலாளிகள் மீது தாக்குதலை மேற்கொண்டார்.
எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
அதேவேளை, அவரது மனைவி பளை பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தாக்குதலாளிகளைத் தமக்குத் தெரியும் என அவர்களின் வீடுகளை தாக்குதலுக்குள்ளான குடும்பம் இனங்காட்டியுள்ளது.
அதனடிப்படையில் அங்கு பொலிஸார் சென்றபோது சந்தேகநபர்கள் வீடுகளில் தங்கியிருக்கவில்லை. இந்நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன்