வவுனியாவில் ஓட்டோ சாரதி ஒருவர் மீது இராணுவத்தினர் கடும் தாக்குதல்

வவுனியாவில் ஓட்டோ சாரதி ஒருவர் மீது தாக்குதல் இராணுவத்தினர் கடும் தாக்குதல் மேற்கொண்டனர் எனத் தெரிவித்து இராணுவ வாகனம் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டது.

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ரயில் நிலைய வீதியூடாக ஓட்டோ ஒன்று பயணித்தபோது இராணுவ கப் ரக வாகனம் ஒன்றை குறித்த ஓட்டோ முந்திச் செல்ல முற்பட்டபோது இராணுவ வாகனத்தின் சாரதிக்கும், ஓட்டோ சாரதிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதுடன், ஓட்டோ இராணுவ வாகனத்தை முந்திச் சென்றுள்ளது.

இதையடுத்து வவுனியா - பண்டாரிக்குளம் வீதியில் திரும்பிய ஓட்டோவை வழிமறித்த குறித்த இராணுவ கப் ரக வாகனத்தில் இருந்த இராணுவத்தினர் ஓட்டோ சாரதி மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன் பின்னர் இராணுவ வாகனத்தைப் பின் தொடர்ந்து சென்ற ஓட்டோ சாரதி பண்டாரிக்குளம் பகுதியில் இராணுவ வாகனத்தை வழிமறித்து தன் மீது தாக்குதல் நடத்தியமைக்கான காரணத்தைக் கேட்டார். இதன்போது அப்பகுதியில் பொதுமக்கள் குவிந்ததுடன், இராணுவ வாகனத்தைச் செல்ல விடாது வழிமறித்தனர்.

அதையடுத்து அவ்விடத்துக்கு வருகை தந்த வவுனியா பொலிஸார் இராணுவ வாகனத்தைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்தின் பின்னர் இராணுவ வாகனத்தைப் பொலிஸார் விடுவித்திருந்தனர்.

இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளாகிய ஓட்டோ சாரதி வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியாப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் ஓட்டோ சாரதி ஒருவர் மீது இராணுவத்தினர் கடும் தாக்குதல்

எஸ் தில்லைநாதன்