
posted 20th November 2021

பாராளுமன்ற உறுப்பினரும்,யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன்
தற்போது பல சுமைகளைத் தாங்கி நிற்கும் மக்களுக்கு மேலுமொரு சுமையை கொடுக்காமல் இருப்பதே அந்த மக்களுக்கு கொடுக்கும் முதல் தீர்வாக அமையும் எனப் பாராளுமன்ற உறுப்பினரும்,யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
20.11.2021 சனிக்கிழமை பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற அமர்வில் 2022ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் தொடர்பாக உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் வருகின்ற வேளையில் மக்கள் பல சவால்களையும், பல இன்னல்களையும்,பல துன்பங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டு வெடிப்பின் பின் எமது சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரம் ஆட்டம் கண்டிருந்தது. அதன் பின் யாரும் எதிர்பாராத கொரோனா அலைகள் உலகெங்கும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பதற்கு நமது நாடும் விதிவிலக்கல்லவே. அதிலும் கொரோனா நிலைமை சுகாதாரத்துறை மற்றும் பொருளாதாரத்திற்கு பாரிய நெருக்கடியைக் கொடுத்துள்ளதை நிவர்த்தி செய்யம்முகமாக தடுப்பூசித் திட்டம் வெற்றிகரமாக நாடுபூராவும் அமைந்து கொண்டிருக்கின்றது.
தற்போது மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய நெருக்கடி அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு, தட்டுப்பாடு, பதுக்கல். இது இலங்கையில் மட்டுமல்ல, ஒரு சில உலக நாடுகளிலும் இந்தப் பற்றாக்குறை காணப்படுகிறது. அதனை எமது மக்களும் சந்தித்து வருகின்றனர். அதற்கான தீர்வுகளை இந்த வரவு-செலவுத் திட்டத்தில் மக்கள் எதிர்பார்த்தனர்.
நான் நம்புகிறேன் மக்களின் முக்கிய பிரச்சனைக்கான தீர்வு இந்த வரவு-செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. பல சுமைகளைத் தாங்கி நிற்கும் மக்களுக்கு மேலுமொரு சுமையை கொடுக்காமல் இருப்பதே முதல் தீர்வாக அமையும். இதுவரை மொத்த மக்களிடம் இருந்தும் பணத்தைப் பெற்று மறுபடியும் வரவு-செலவுத்திட்டம் ஊடாக அபிவிருத்திகளுக்கு அந்த நிதியைக் கொடுப்பதே வழமை. ஆனால் இம்முறை ஒரு சொற்ப நபர்களிடம் இருந்து நிதியை எடுத்து இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மக்களுடைய சுமையை அறிந்து எடுக்கப்பட்ட ஓர் வேலைத்திட்டம் இது.
இன்று அதிக விலைவாசி, பதுக்கல், தட்டுப்பாடு ஆகியன உள்ளன. அதற்கு உடனடித் தீர்வு இல்லாவிட்டாலும் வரவு செலவுத் திட்டம் ஊடாக நீண்ட கால தீர்வு உள்ளடக்கப்பட்டுள்ளது. எங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் போது நிச்சயமாக பொருட்களின் விலை குறைய வாய்ப்புண்டு. இந்த வரவு செலவுத் திட்டம் கிராமிய அபிவிருத்தியில், உள்ளூர் உற்பத்தியில் அதிக அக்கறை கொண்டு சாத்தியப்படக்கூடிய விடயங்களை உள்ளடக்கிய வரவு செலவுத்திட்டம். எனவே அனைவரும் எங்கள் பிரதேசத்தின், நாட்டின் பிரச்சனைகளை ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்காமல் வரவு செலவுத் திட்டத்தில் உள்ள நன்மைகளைக் கொண்டு எங்கள் பிரதேசத்தினையும், நாட்டினையும் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

எஸ் தில்லைநாதன்