
posted 7th November 2021

ரிஷாட் பதியுதீன்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அம்பாறை மாவட்டத்திற்கான வருகை இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆறுமாத காலத்தின் பின்னர் பிணையளிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மாவட்டங்கள் தோறும் சென்று தமது ஆதரவாளர்கள் கட்சி முக்கியஸ்தர்கள், கட்சித் தொண்டர்கள், பொது மக்களை சந்தித்து வருகின்றார்.
இதன்படி இம்மாதம் 7 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கு அவர் வருகை தரவிருந்ததுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு வருகை தொடர்பாக கூடி ஆராய்ந்து மக்கள் சந்திப்புகளுக்கான முடிவுகளையும் எடுத்திருந்தது.
எனினும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டின் அம்பாறை மாவட்டத்திற்கான வருகை அடுத்த வாரத்திற்குப் பிற்போடப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார்.
இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுள்ள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் வெளிநாடு செல்வதன் காரணமாகவே, தலைவர் ரிஷாட்டின் அம்பாறை மாவட்டத்திற்கான வருகை பிற்போடப்பட்டுள்ளதாக அறியவருகின்றபோதிலும், இவை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் முகநூல்களில் வெளியான வண்ணமுள்ளன.
இருப்பினும் தமது கட்சியின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப்பின் பிரசன்னத்துடனேயே, அம்பாறை மாவட்டத்திற்கான தமது வருகை அமைய வேண்டுமென்ற விருப்பையே தலைவர் ரிஷாட் கொண்டிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் அறியவருகின்றது.
20 ஆவது அரசியலமைப்பு திருத்ததிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தமை குறித்த பல்வேறு விமர்சனங்கள் கட்சி வட்டாரத்தினுள் எழுப்பப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்