யாழ் பல்கலைக்கழகத்திற்கு இராஜாங்க அமைச்சர் விஜயம்

தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டு, பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

நேற்று சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணி அளவில் யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலின் போது, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார். அதன் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் ஆய்வுகூடத்தையும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பார்வையிட்டார்.

இச் சந்திப்பின், போது தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. நிஷாந்தி ஜெயசிங்க, இலங்கை தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க, யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் கே.சுதாகர், யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் கலாநிதி கே.அருந்தவராஜா, வரலாற்றுத் துறை ஓய்வுநிலை விரிவுரையாளர்களான கலாநிதி ப.புஷ்பரட்ணம், கலாநிதி கே.சிற்றம்பலம், கலாநிதி ச.சத்தியசீலன், கலாநிதி செ.கிருஷ்ணராஜா உட்பட விரிவுரையாளர்கள் மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் கே. சிவராம், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், மற்றும் தொல்லியல்துறையினர், மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் நிறைவில் இலங்கை தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்கவினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திற்கு நூல் ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டது.

யாழ் பல்கலைக்கழகத்திற்கு இராஜாங்க அமைச்சர் விஜயம்

எஸ் தில்லைநாதன்