
posted 19th November 2021
யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து செல்கிறது என தெரிவித்த யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன், பயணங்கள் இதர செயற்பாடுகளின்போது ஒன்று கூடுவதை தவிர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
யாழ்.மாவட்டத்தில் இற்றைவரை 469 மரணம் பதிவாகியுள்ளன. தற்போதைய சூழலில் 634 குடும்பங்கள் கொரேனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது கொரோனா அதிகரித்து செல்கிறது. பொதுமக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்கவேண்டும். சமுக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவை கட்டாயம் பின்பற்றப்படவேண்டும்.
தற்போதைய சுழலில் தளர்வு நிலை அறிவிக்கப்பட்டுள்ளபோதும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதனை கட்டாயம் பின்பற்றவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே யாழ்ப்பாணத்தில் கொரோனாவை முற்றுமுழுதாகக் கட்டுப்படுத்தலாம். முகக்கவசம், இடைவெளி போன்ற விடயங்களை கட்டாயம் பின்பற்றவேண்டும்.
இது மட்டுமன்றி பயணங்கள் இதர செயற்பாடுகளின்போது ஒன்று கூடுவதை தவிர்க்கவேண்டும்-என்றார்.
எஸ் தில்லைநாதன்
கொரோனா தொற்றால் மேலும் வடக்கில் இருவர் பலி!
13 பேருக்கு நேற்று தொற்று.
கொரோனா தொற்றால் யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை சேர்ந்த ஒருவரும், வவுனியாவை சேர்ந்த ஒருவருமாக இருவர் உயிரிழந்தனர்.
யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று நடத்தப்பட்ட பி. சி. ஆர். பரிசோதனையிலேயே இந்த விடயம் வெளிவந்தது. நேற்றைய அறிக்கையின் பிரகாரம்,
பருத்தித்துறை ஆதார மருத்துவமனையால் மாதிரிகள் வழங்கப்பட்ட உயிரிழந்த ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாறு உயிரிழந்தவர் எம். சிவசுப்பிரமணியம் (வயது 74) என்பவராவார்.
இதேபோன்று, வவுனியாவில் உயிரிழந்த வி. சிசுபாலன் வயது 73 என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தவிர, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருவர் உட்பட மாவட்டத்தில், 7 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் மூவருக்குமாக வடக்கு மாகாணத்தில் 13 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

எஸ் தில்லைநாதன்