
posted 21st November 2021
நாட்டின் பல பிரதேசங்களிலும் மரக்கறி வகைகளுக்குப் பெரும் தட்டுப்பாடும், விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மலையக மரக்கறிகளான கரட், பீட்றூட், கோவா உட்பட பல்வேறு மரக்கறி வகைகளுக்கும் பெரும் தட்டுப்பாடும், எதிர்பாராத விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும், குறிப்பாக மலையத்தில் நிலவும் மழை, வெள்ளம் காரணமாகவும், இரசாயன உரத்திற்கு அரசு தடை விதித்துள்ளமை காரணமாகவும், தமது உற்பத்திகள், செய்கைகள் பெரும்பாதிப்பை அடைந்துள்ளதாக மரக்கறி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் கொழும்பு, தம்புள்ள போன்ற முக்கிய பல பொருளாதார மத்திய நிலையங்களுக்குக் கொண்டு வரப்படும் மரக்கறிகளின் தொகை வெகுவாகக் குறைந்துள்ளதாக அறியவருகின்றது.
இதன் காரணமாகவே நாட்டின் பல பாகங்களிலும் மரக்கறி வகைகளுக்கு தட்டுப்பாடும், விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, பல பிரதேசங்களிலும் வீட்டுத் தோட்டம் மற்றும் சிறு தோட்டச் செய்கையாக மேற் கொள்ளப்படும் உள்ளுர் மரக்கறிகள், கீரை வகைகளின் விலையும் பெரும் உயர்வடைந்துள்ளது.
நாட்டில் தற்சமயம் அன்றாட வாழ்க்கைச் செலவு விசம்போல் ஏறியுள்ள நிலையில், மரக்கறி வகைளின் விலையேற்றமும் நுகர்வோரைப் பெரிதும் பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்