மறைவுக்கு அனுதாபம்

“இலங்கையின் மூத்த தமிழ்ப்பத்திரிகை ஆசிரியர்களுள் ஒருவரான ம.வ.கானமயில் நாதனின் மறைவு, பத்திரிகை உலகிற்குப் பேரிழப்பாகும். என்போன்ற ஊடகவியலாளர்களைக் குருவாக இருந்து ஆற்றுப்படுத்தியதோடு, புடம் போடப்பட்ட நடுநிலை பிறழா ஊடகப்பரம்பரையை உருவாக்கிய பெருமைக்குரியவரே அவர் ஆவார்.”

இவ்வாறு, கிழக்கிலங்கை செயற்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளன சிரேஷ்ட ஆலோசகருமான கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம், மூத்த ஊடகவியலாளர் ம.வ.கானமயில் நாதனின் மறைவு குறித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பத்திரிகைத்துறை ஜாம்பவான் அமரர் எஸ்.டி.சிவநாயகத்தின் ஊடகப் பண்ணையில் வளர்த்தவர்கள் நாம் எனபெருமிதம் கொள்ளும் நிலையில் அவரின் வழிகாட்டுதலில் என்போன்றவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து, புடம் போடப்பட்ட ஊடகவியலாளர்களாக மாற்றிய பெருமை மதிப்பிற்குரிய கானமயில் நாதன் ஐயாவையே சாரும்.

தினபதி – சிந்தாமணி காலம் முதல், யாழ் மண்ணின் உதயன் - சஞ்சீவி, காலைக்கதிர் வரை அவருடன் இணைந்த, வளர்க்கப்பட்ட பிராந்திய ஊடகவியலாளன் என்ற பெருமிதமும் எனக்குள்ளது.

ஒருமுறை கிழக்கிலிருந்து பிராந்திய ஊடகவியலாளர்கள் குழு ஒன்று யாழ்ப்பாணத்திற்கு களவிஜயமொன்றை நாம் மேற்கொண்டபோது, உதயனில் எம் குழுவினரை வரவேற்று, உபசரித்து வாஞ்சையான நேசத்தை அவர் வெளிப்படுத்தியது மட்டுமன்றி, யாழ் மண் வாசனை கொண்ட பனம் பொருள் நினைவுப் பரிசையும் எம் அத்தனை பேருக்கும் வழங்கி கௌரவித்த பெருமிதத்தை என்றும் எனது ஊடக நண்பர்கள் நினைவுபடுத்திக் கொள்ளத் தவறுவதில்லை.

எவருக்கும் அஞ்சாத அவரது எழுத்துக்கள், எழுதி வந்த ஆசிரிய தலையங்கங்கள் சமூக விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்திருந்தன.

இதனால் அவர் பல்வேறு துன்பதுயரங்கள், நயவஞ்சகர்களின் உயிர் அச்சுறுத்தல்கள், அடாவடிகளையும் எதிர் கொண்ட போதும் இறுதி மூச்சு வரை அத்தனையையும் நெஞ்சு நிமிர்த்தி எதிர் கொண்டார்.

ஒரு முறை “ஐசே”, வெளிநாட்டிலுள்ள எனது குடும்ப உறவினர்கள் தம்முடன் வந்து அங்கேயே தங்கிவிடுமாறு அழைக்கிறார்கள் என்னால் இந்தப் பணியைவிட்டு அப்படிச் சென்று தங்கிவிட முடியாது” என என்னிடம் உதயன் ஆசிரியர் கதிரையில் அமர்ந்திருந்து கூறிய வார்த்தைகள் என்மனதில் பசுமரத்தாணி போல் நினைவில் உள்ளது.

அடிக்கடி நான் சந்தித்து உரையாடும் போது “ஐசே” என்று வாஞ்சையுடன் என்னை விழிக்கும் வார்த்தை, அவரை நினைவூட்டிக் கொண்டேயிருக்கும்.

அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது மனைவி குடும்பத்தினரின் துயரில் அன்னாரது சிஷ்யர்களான நாமும் பங்கு கொள்கின்றோம்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைவுக்கு அனுதாபம்

எஸ்.தில்லைநாதன்