
posted 19th November 2021
கொரோனா இடையிடையே வந்து கொல்லும், ஆனால் டெங்கு நின்று கொல்லும். மன்னாரில் பெய்த மழை காரணமாக அதிகமான இடங்கள் வெள்ளத்தால் தொடர்ந்து சூழ்ந்திருப்பதால், மன்னார் மக்கள் டெங்கிலிருந்து தப்புவதற்கு விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.வினோதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.வினோதன் மன்னார் மாவட்ட மக்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில்;
இந்த வருடம் (2021) இதுவரை 33 பேர் டெங்கு நோயாளர்களாக வைத்தியசாலைகளில் இனங்காணப்பட்டுள்ளனர்.
இத் தொகையானது 2018, 2019 உடன் ஒப்பிடுகையில் குறைவான எண்ணிக்கையாக காணப்பட்டாலும் தற்பொழுது மன்னாரில் இனம் காணப்பட்டுள்ள 33 டெங்கு நோயாளர்களில் 06 பேர் இந்த நவம்பர் (2021) மாதம் கண்டறியப்பட்டுள்ளார்கள்.
ஒரு வருடத்தின் பின்னர் டெங்கு இரத்தப்பெருக்கு நிலைக்குரிய அறிகுறிகளுடன் சிறுவன் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கடந்த வருடம் (2020) ஜனவரியில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரு பொலிசார் 24 மணிநேர இடைவெளிக்குள் டெங்கு காரணமாக உயிர் இழந்த சம்பவமும் உண்டு.
தற்பொழுது மன்னார் நகருக்குள் பனங்கட்டிகொட்டு, சின்னக்கடை பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளபோதும் தற்பொழுது ஏனைய பகுதிகளிலும் தோட்டவெளியிலும் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதனால் மன்னாரில் டெங்கு பரவாதிருக்க பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தொற்றுநோய் தடுப்பு துரித நடவடிக்கை பிரிவினர் என சகல ஆளனியரும் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
அத்துடன் வைத்தியசாலைகள் டெங்கு நோயாளர்களை இனங்காணவும், சிகிச்சை அளிக்கவும் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.
கொரோனா இடையிடையே வந்து கொல்லும். ஆனால் டெங்கு நின்று கொல்லும் என ஒவ்வொருவரும் உணர்ந்து காய்ச்சல் ஏற்பட்டால் சுயசிகிச்சை மேற்கொள்ளாது வைத்தியசாலையை நாடும்படியும். நுளம்பு பெருகும் இடங்களை இனங்கண்டு அழிப்பதுடன் நுளம்பு தொல்லையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும்படி கேட்டுள்ளார்.

வாஸ் கூஞ்ஞ