
posted 26th November 2021
உயர்தர மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் கடந்த ஐந்து வருடங்களாக மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கம் மன்னார் மற்றும் மடு கல்வி திணைக்களங்கள் ஊடாக விஞ்ஞான, கணித பிரிவு உயர்தர கல்வி மாணவர்களுக்கான முன் ஆய்த்த மூன்று நாட்கள் பயிற்சி வகுப்புக்கள் கல்வி திணைக்களத்தின் வளவாளர்கள் மூலம் நடாத்தி வருகின்றது.
கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக 2021 ஆண்டுக்குரிய கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை 2022 மாசி மாதத்தில் நடைபெறுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதால் அதற்கான முன் ஆய்த்த வகுப்புக்கள் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தினால் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ் வகுப்புக்கள் கடந்த 25.11.2021 வியாழன் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரையும் ஆரம்பமாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து அடுத்த விஞ்ஞான, கணித பயிற்சி வகுப்புக்கள் 30.11.2021 தினத்திலும் 01.12.2021 புனித சவேரியார் பெண்கள், ஆண்கள் தேசிய பாடசாலைகளிலும் காலை 9 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் துயர் தடைப்பு மறுவாழ்வுச் சங்க செயலாளர் சின்கிலேயர் பீற்றர் தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆரம்ப நிகழ்வில் மன்னார் மற்றும் மடு பிரதேச செயலக பிரிவிலிருந்து சுமார் 250 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இம் மாணவர்களின் நலன்கருதி புலன்பெயர்ந்த மன்னார் மாணவர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'ஹெல்ப் ஹவூஸ்' நிதிக்கும், மன்னார் மறுவாழ்வு துயர்துடைப்புச் சங்கத் தலைவர் அருட்பணி தி.நவரெட்ணம் அடிகளாருக்கும். மன்னார், மடு ஆகிய இரு கல்விப் பணிப்பாளர்களுக்கும் இம் முன்னோடி பயிற்சி வகுப்புக்களின் வளவாளர்களுக்கும் இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கும் மன்னார் துயர் தடைப்பு மறுவாழ்வுச் சங்க செயலாளர் சின்கிலேயர் பீற்றர் ஆரமப் நிகழ்வில் கலந்து கொண்டு நன்றி தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ