மன்னாரில் மழை வெள்ளத்தால் 4215 குடும்பங்கள் பாதிப்பு என பதிவாகியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒன்பது தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக இப் பகுதியிலுள்ள தாழ்ந்த பகுதிகள் மழை வெள்ளத்தினால் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றபோதும் தொடர்ந்து இந் நிலை தொடருமாகில் மக்கள் இடம்பெயரும் தொகையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து ஒன்பது தினங்களாக காலநிலை மாற்றம் அடைந்த நிலையில் பரவலாக மழை பெய்து வந்தபோதும் கடந்த ஓரிரு தினங்களாக கன மழை பெய்து வருகின்றது.

இதனால் கூலி தொழிலாளிகள் மற்றும் மீனவர்கள் இவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்திருக்கும் அறிக்கையில் கடந்த முதலாம் திகதியிலிருந்து ஒன்பதாம் திகதி செவ்வாய் கிழமை (01.11.2021 - 09.11.2021) வரை மழை வெள்ளத்தால் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் 4215 குடும்பங்களைச் சார்ந்த 14,951 நபர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் 3701 குடும்பங்களைச் சார்ந்த 13,192 நபர்களும், மாந்தை மேற்கு பகுதியில் 340 குடும்பங்களைச் சார்ந்த 1092 நபர்களும், நானாட்டான் பிரிவில் 08 குடும்பங்களைச் சார்ந்த 39 நபர்களும், முசலி பிரதேச செயலகப் பிரிவில் 166 குடும்பங்களைச் சார்ந்த 628 பேரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக பதிவாகியுள்ளது.

அத்துடன் ஐந்து பாதுகாப்பான அமைவிடத்தில் மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் 96 குடும்பங்களைச் சார்ந்த 352 நபர்களும், மாந்தை மேற்கு பிரிவில் ஒரு இடைத்தங்கல் நிலையத்தில் 4 குடும்பங்களைச் சார்ந்த 16 நபர்களும் மொத்தம் 100 குடும்பங்களில் 368 நபர்கள் இடம்பெயர்ந்து ஆறு இடங்களில் பாடசாலை மற்றும் இனம் காணப்பட்ட இடைத் தங்கல் நிலையங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதே வேளையில் பலர் இடம்பெயர்ந்து அயலிலுள்ள உறவினர்கள் வீடுகளிலும் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 31,500 ஏக்கர் அடி நீர் கொள்வனவு இருக்கக்கூடிய மன்னார் மாவட்டத்தின் பிரதான குளமாகிய கட்டுக்கரைக்குளம் நீர் நிரம்பி 3 அங்குல உயரத்தில் நீர் வான் பாய்ந்து வருவதாக மன்னார் மற்றும் வவுனியா நீர்பாசன பணிப்பாளர் நாகராஜா யோகராஜா தெரிவித்தார்.

இவ் வெள்ளப் பெருக்கு தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல், மன்னார் மற்றும் வவுனியா நீர்பாசன பணிப்பாளர் நாகராஜா யோகராஜா, அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் கே.திலீபன் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் சம்பவ இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் மழை வெள்ளத்தால் 4215 குடும்பங்கள் பாதிப்பு என பதிவாகியுள்ளது.

வாஸ் கூஞ்ஞ