
posted 8th November 2021
மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதுடன் கடும் குளிரும் இருள் சூழ்ந்த காலநிலையாகவும் இங்கு காணப்பட்டு வருகின்றது.
கடல் கொந்தளிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தால் மன்னார் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லாது வீடுகளில் முடங்கி இருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில தினங்களாக இப்பகுதியில் பெய்து வருகின்ற மழை காரணமாக நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மடுக்கரைப் பகுதியில் கொக்குமடு வாய்க்கால் உடைப்பெடுத்ததால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் மற்றும் மன்னார் வவுனியா மாவட்டங்களின் நீர்பாசன பணிப்பாளர் நடராஜா யோகராஜா ஆகியோர் இராணுவத்தினரின் உதவியை நாடியதைத் தொடர்ந்து அவை உடன் சீர்செய்யப்பட்டதாகவும், அத்துடன் மன்னார் மாவட்டத்தின் 31500 ஏக்கர் அடி நீர் கொள்வனவு கொண்ட பிரதான குளமாக விளங்கும் கட்டுக்கரைக்குளத்தில் தற்பொழுது பெய்து வரும் மழையால் நீர் நிரம்பி 3 அங்குலம் நீர் வான் பாய்ந்து கொண்டிருப்பதாக மன்னார் வவுனியா மாவட்டங்களின் நீர்பாசன பணிப்பாளர் நடராஜா யோகராஜா தெரிவித்தார்.
இதனால் எதாவது பாதிப்புக்கள் ஏற்படுமா என்பதை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நீர்பாசன பணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
மேலும் மன்னாரில் தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் சில இடங்களில் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ