
posted 15th November 2021

இரா.துரைரெத்தினம்
அரச உழியர்கள் நாட்டிலுள்ள மக்களின் வரிப்பணத்திலும், மக்கள் நலனுக்காக சேவை செய்கின்ற ஒரு சேவையாகும். இதை விடுத்து அரச உழியர்கள் நாட்டிற்கு பெரும் சுமை என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளதென்பது அரச ஊழியர்கள் நாட்டிற்காகச் செய்யும் அர்ப்பணிப்பை கேலிக் கூத்தாக நினைக்கின்றாரா? இப்படிப்பட்ட கருத்துக்களை பொறுப்பு வாய்ந்த அமைச்சர் கூறலாமா? என முன்னல் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பத்மநாபா மன்றம்- ஈ.பி.ஆர்.எல்.எப், இரா.துரைரெத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்;
கடந்த வாரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65ஆக உயர்த்தும் கருத்தை வரவு செலவுத் திட்டத்தின் போது நிதி அமைச்சர் அவர்கள் முன் வைத்த நிலையில் நாட்டிற்கு சுமையாக அரச ஊழியர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதென்பது அரச ஊழியர்களுக்கு மனவேதனையைத் அளித்துள்ளது. பல நெருக்கடிகளுக்கு மத்தியில் சொந்த நலனை தியாகம் செய்து, இரவு பகல் பராது, கடன் சுமையுடனும், பொருளாதார கஸ்ரத்துடனும், கொரோனாவுக்கு மத்தியிலும்,பதவி உயர்வு இல்லாமலும் அரசாங்கம் வழங்க வேண்டிய பல உரிமை தொடர்பான சலுகைகளையும் பெற முடியாமலும், அரசசேவையை முதன்மைப்படுத்தி இயங்குகின்ற அரசஊழியர்களை வேண்டா வெறுப்புடன் பார்ப்பதென்பது மறைமுகமான ஏதாவதொரு திட்டத்தை வைத்துள்ளனரா? என சந்தேகிக்க வேண்டி உள்ளது. இக் கருத்து பொறுப்பு வாய்ந்த அமைச்சரால் கூறக் கூடிய கருத்து அல்ல.
பொருத்தப்பாடு அல்லாத பொது நிருவாகக் கொள்கை, ஓழுங்கற்ற மதிப்பீடு அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தொழில் நுட்பம், நிதி முகாமைத்துவம், கணக்காய்வுமுறை, பொதுச்சேவை பொதுநிருவாகம், பொருளாதாரத் திட்டம், சட்டமொழுங்கு, மறைமுகமான ஆணைக் குழுக்கள்,பக்கச்சர்பான நீதித்துறை, நிதிமோசடி,பொருளாதார வீக்கம், அரசியல் கலப்படம் அற்ற கொள்கைத் திட்டங்களை அமுலாக்குவதை விடுத்து அரச ஊழியர்கள் மீது சுமையை சுமத்துவதென்பது ஒரு நல்லாட்சிக்கான பொறுப்புக் கூறல் அல்ல.
நாடு முடக்கப்பட்டு நிருவாகம் ஸ்தம்பிதம் அடைந்த நிலையிலும் நிதி பற்றாக்குறையாக உள்ளதென தெரிந்திருந்தும் அரசியலுக்காக நிதி வீண்விரயம் செய்யப்படுவதும் கையிலிருப்பிலுள்ள நிதிகளை செலவு செய்வதற்காக தவறான வியாக்கியானங்களைக் கூறுவதும் ஏற்புடையதல்ல.
எனவே கௌரவ நிதி அமைச்சர் அவர்கள் அரச ஊழியர்கள் தொடர்பாக முன் வைத்த கருத்தை பரிசீலனை செய்து தவறை ஏற்றுக் கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்