பறிபோகும் வவுனியா வடக்கு! பொருத்தமான தவிசாளரை முன்மொழியுங்கள்

வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு தோற்கடிக்கப்பட்டாலும் பொருத்தமான ஒருவரை தவிசாளராக நியமித்தால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி ஆதரவளிக்கும் என்று கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ஜெ.மயூரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

"தமிழ் மக்களின் இனப்பரம்பலையும், இன விகிதாசாரத்தையும் மாற்றியமைக்கும் முனைப்புக்கள் வடக்கு - கிழக்கு பகுதிகளில் அரசால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக வவுனியா வடக்கு பிரதேசம் தீவிரமாகப் பறிபோய்க் கொண்டிருக்கின்றது. இதனைக் கண்டித்து எமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருவதுடன், எமது கட்சியால் வவுனியா நகரில் முதன் முதலாக பாரியளவிலான ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் வவுனியா வடக்கு பிரதேச நிலப்பரப்பையும், அதன் பகுதிகளையும் தமிழ்ப் பிரதிநிதி ஒருவரே தொடர்ந்தும் நிர்வகிக்க வேண்டும் என்பதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி அன்று தொடக்கம் உறுதியாகவே உள்ளது.

அதனடிப்படையிலே முதன் முதலாக வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் மூன்று உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளித்து தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கு உதவியிருந்தது. ஆனாலும், தற்போதைய தவிசாளர் பாரபட்சமாக நடப்பதுடன், மக்கள் நலன்சார்ந்த விடயங்களை முன்னெடுப்பதற்கும் தடையாக இருப்பதாக எமது கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்த நிலையில், பாதீட்டிலும் குறைபாடுகள் காணப்பட்டன. அதன் காரணமாகவே நாம் அதனை எதிர்க்க வேண்டிய நிலை உருவாகியது. எமது கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் உறுப்பினர்கள் கூட குறித்த பாதீட்டுக்கு எதிராகவே வாக்களித்திருந்தனர்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையை முறையாகக் கொண்டு செல்லக் கூடிய பொருத்தமான ஒருவரை தவிசாளராக நியமிக்கும் பட்சத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வவுனியா வடக்கு பிரதேச சபையின் அதிகாரம் பெரும்பான்மையினரின் கைகளுக்குச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் தனது ஆதரவை வழங்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களில் பலர் கூட தவிசாளருக்கு எதிரான மனநிலையில் இருக்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் பாதீடு தொடர்பான அமர்வுக்கு வருகை தரவில்லை என்பதையும் இங்கு சுட்டிக் காட்டுகின்றோம்.

அத்துடன், வவுனியா வடக்கு பிரதேச சபையானது பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்குச் செல்வதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்றும் இடமளிக்காது என்பதை மீள நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

எனவே, வவுனியா வடக்கின் நிலமையை உணர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொருத்தமான ஒருவரை தவிசாளராக முன்மொழிந்து செயற்பட வேண்டும் என நாம் கோருவதுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி தனது கொள்கையுடனும், பற்றுறுதியுடனும் தொடர்ந்தும் பயணிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்" என்றுள்ளது.

பறிபோகும் வவுனியா வடக்கு! பொருத்தமான தவிசாளரை முன்மொழியுங்கள்

எஸ் தில்லைநாதன்