
posted 8th November 2021
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள பத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் விசேட டெங்கு ஒழிப்பு வார வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.
கல்முனைப் பிராந்தியத்திலுள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இறக்காமம், நாவிதன்வெளி, திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகரிர பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பத்து பிரிவுகளிலுமே விசேட டெங்கு ஒழிப்பு வார வேலைத்திட்டங்கள் திங்கட் கிழமை (08) முதல் ஆரம்பமாகியுள்ளன.
தற்போதய தொடர்ச்சியான மழையுடன் கூடிய காலநிலை காரணமாகவும், குறிப்பாக மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நுளம்பு பரவல் அதிகரித்துவரும் நிலை அவதானிக்கப்பட்டுள்ளதாலும், சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு டெங்கு ஒழிப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது.
இதன்படியும், டெங்கு நோயளர்கள் பெருகா வண்ணம் தவிர்ப்பதற்காகவும் காத்திரமான டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஜீ.சுகுணன் ஆவன செய்துள்ளார்.
இதற்கமைய குறித்த டெங்கு பரவும் அபாயம் காணப்படும் தமது பிரிவிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை இனம் கண்டு டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் விஷேட வேலைத்திட்டத்தை அவர் நடைமுறைப்படுத்த உரிய ஆலோசனைகளையும், நெறிப்படுத்தலையும் வழங்கியுள்ளார்.
இதே வேளை பூச்சியல் ஆய்வுகளின் படி டெங்கு பரவும் அபாய முள்ள பிரதேசமாக இனம் காணப்பட்டுள்ள நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு ஒழிப்பு விசேட வார நடவடிக்கைகள் இன்று திங்கட் கிழமை முன்னெடுக்கப்பட்டன.
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பரூஸா நக்பர் தலைமையில் குறித்த டெங்கு வார வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கால நிலை சீரின்மைக்குமத்தியிலும் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களப்பணியாளர்கள், பொலிஸார், இரானுவத்தினர், தன்னார்வதொண்டர்கள் இதில் கூட்டாக இணைந்து ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்