படைகளின் அச்சுறுத்தல்கள் மத்தியில் நினைவேந்தல்

படைத் தரப்புகளின் அச்சுறுத்தல்கள் - அடக்குமுறைகள் - கண்காணிப்புகள் - அடாவடிகளுக்கு மத்தியில் தமிழர் தேசமான வடக்கு - கிழக்கில் நேற்று சனிக்கிழமை பேரெழுச்சியுடன் மாவீரர்கள் நினைவேந்தப்பட்டனர்.

தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து தீருவிலில் ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வில் மக்கள் ஏற்றிய தீபங்களை ஏற்றிய கையோடு படையினர் அவற்றை தட்டிவீழ்த்தி அராஜகம் புரிந்தனர்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக களமாடி மரணித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 27ஆம் திகதி நினைவேந்தப்படுகின்றனர். 2009 போர் முடிவுக்கு வந்த பின்னர் மாவீரரை நினைவேந்த அப்போதைய அரசாங்கம் தடை விதித்தது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மாவீரர் நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டது. எனினும், ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து நீதிமன்றங்கள் மூலமும் கொரோனா தொற்றை காரணம் காட்டியும் மாவீரர் நினைவேந்தல் தடுக்கப்பட்டது. இந்த ஆண்டு சில நீதிமன்றங்கள் கொடிகள், அடையாளம் இன்றி நினைவுகூர முடியும் என்றும் தெரிவித்தமையை தொடர்ந்து நேற்றைய தினம் மாவீரர்களை நினைவுகூர மக்கள் எழுச்சியுடன் தயாரானார்கள்.

ஆனால், படைத் தரப்புக்கள் தமிழர் தாயகம் முழுவதும் குவிக்கப்பட்டு கண்காணிப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டதுடன், நினைவேந்தல்களை தடை செய்யும் ஏற்பாடுகளும் தொடங்கின. ஆனால், அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து தமிழ் மக்கள் எழுச்சியுடன் தமது உறவுகளை - தமக்காகக் களமாடி வீழ்ந்தவர்களை உறுதியுடன் மாலை 6.05 மணிக்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்திருந்த இடங்களிலும், வீடுகளிலும், பொது இடங்களிலும், மத ஸ்தலங்களிலும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வல்வெட்டித்துறை - தீருவிலில் குமரப்பா - புலேந்திரன் பன்னிரு வேங்கைகளின் நினைவுதூபி இருந்த இடத்தில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. மாவீரர் துயிலும் இல்லம் இருந்த வேலணை சாட்டி, பருத்தித்துறை முனை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்பவற்றில் மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றது. அத்துடன், பொதுமக்கள் பலரும் வீடுகளில் தீபங்கள் ஏற்றியதுடன், மாவீரர்களின் உறவினர்கள் அவர்களின் உருவப்படங்களுக்கு மலர் மாலையிட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தீருவிலில் அடக்குமுறை

வடமராட்சி - வல்வெட்டித்துறை - தீருவிலில் குமரப்பா - புலேந்திரன் நினைவுத் தூபி இருந்த இடத்தில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து நினைவேந்தலை முன்னெடுத்தனர். ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம் இருந்த பகுதியிலிருந்து பேரணியாக தீருவில் நினைவுதிடலில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் மக்களும் ஒன்றுகூடினர். பெருமளவு படையினரும் பொலிஸாரும்கூடி நிகழ்வை கட்டுப்படுத்தினர். சுமார் ஒரு கிலோமீற்றர் சுற்றுவட்டாரப் பகுதிக்குள்ளேயே மாலை 5 மணி தொடக்கம் சென்றவர்கள் கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். தீருவில் நினைவுத்திடல் செல்லும் பாதைகளில் மக்கள் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

எனினும், மாலை 5.30 மணிக்கு பேரணி ஆரம்பமானபோது படைத் தரப்புகளால் மக்களை தடுக்கமுடியவில்லை. “பயங்கரவாதிகளை நினைவுகூராதீர்கள்”, “விடுதலைப் புலிகள் என்று சொன்னாலும் கைது செய்யப்படுவீர்கள்” என்று பொலிஸார் எச்சரித்தனர். அதையும் பொருட்படுத்தாமல் தீருவில் நினைவுத் திடலை சென்றடைந்தனர். அங்கு, குவிந்திருந்த இராணுவத்தினர் கொரோனா தொற்றை காரணம் காட்டி 50 பேரையே உள்ளே செல்ல அனுமதித்தனர். பெருந்திரளான மக்கள் அங்கு திரளவே இராணுவத்தினர் அச்சுறுத்தி அவர்களை அங்கிருந்து விரட்ட முற்பட்டனர். இதனால், அங்கு கடும் தர்க்கங்கள் வெடித்தன.

மாலை 6.05 இற்கு பிரதான தீபம் திடலில் ஏற்றப்படவே, திடலின் வெளியே நின்ற மக்களும் தீபங்களை ஏற்றினர். திடலின் மதிலில் ஏற்றப்பட்ட தீபங்களை உடனடியாகவே அங்கு நிறைந்திருந்த படையினர் தட்டி வீழ்த்தினர். இதனிடையே அங்கு கூடி தீபம் ஏற்றிய பலநூறு மக்களை புலனாய்வாளர்கள் ஒளிப்பதிவு செய்தனர். எனினும், மக்கள் எழுச்சியாக அஞ்சலியை முன்னெடுத்தனர்.

கிளிநொச்சியில்....!

கிளிநொச்சியில் மாவீரரை நினைவேந்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்படாமையால் மக்கள் வீடுகளிலேயே மாவீரர்களை நினைவேந்தினர். அத்துடன், ஆலயங்கள், தேவாலயங்களில் விசேட பூசைகள் - வழிபாடுகளிலும் மக்கள் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவில்...

முல்லைத்தீவில் மக்கள் வீடுகளில் மாவீரர் நாளை எழுச்சியுடன் நினைவேந்தினர். வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், அளம்பில் துயிலும் இல்லம், தேவிபுரம் துயிலும் இல்லம், முல்லைத்தீவு கடற்கரையில் படைத் தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி மக்கள் அஞ்சலி செலுத்தினர். வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்திலும் 50 பேருக்கே அனுமதி வழங்கப்பட்டது. ஏனையோரை கலைந்து செல்லுமாறு பொலிஸார் எச்சரித்தனர். உள்ளே செல்ல முடியாத போதிலும் வெளியே நின்ற பெருமளவிலானோர் 6.05 மணிக்கு தீபங்களை ஏற்றி அஞ்சலித்தனர்.

மன்னாரில்...

மன்னாரில் பொதுமக்கள் வீடுகளில் அஞ்சலி செலுத்தினர். இலங்கை தமிழ் அரசு கட்சி அலுவலகம், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் அலுவலகம் என்பவற்றில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன அத்துடன், ஆலயங்கள், தேவாலயங்களில் விசேட பூசைகளும் இடம்பெற்றன.

வவுனியாவில்

வவுனியாவில் பிரஜைகள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இடம் ஒன்றிலும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நடத்தும் தொடர் போராட்ட பந்தல் மற்றும் இல்லங்கள், வர்த்தக நிலையங்கள் தோறும் மாவீரர்கள் எழுச்சியுடன் அஞ்சலிக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தில்...

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தடைகள் காரணமாக பொதுமக்கள் வீடுகளிலும், அரசியல்வாதிகள் வீடுகள் மற்றும் கட்சி அலுவலகங்களிலும் மாவீரர்களை நினைவேந்தினர். ஆலயங்களில் வழிபாடுகளிலும் மக்கள் ஈடுபட்டனர்.

படைகளின் அச்சுறுத்தல்கள் மத்தியில் நினைவேந்தல்

எஸ் தில்லைநாதன்

விடுமுறைக்கு எந்த வசதி தேவையோ அதற்குரியதைக் கிளிக் செய்யுங்கள்

Home Page - நீங்கள் உங்களது விடுமுறையைக் கழிப்பதற்கு Home Page என்றால் இதைக் கிளிக் செய்யுங்கள்: விடுமுறை

Appartments - அப்பாட்மென்ற்ஸ் வேண்டுமா? Appartments

Resorts - றிசோட்ஸ் வேண்டுமா? Resorts

Villas - விலாஸ் வேண்டுமா? Villas

B & B - B & B வேண்டுமா? B&B

Guest Houses - கெஸ்ட் வீடுகள் வேண்டுமா? Guests House