
posted 5th November 2021
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஜீ.சுகுணனின் அறிவுறுத்தலுக்கமையவும், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பரூஸா நக்பரின் தலைமையிலும் இன்று வெள்ளிக்கிழமை (05.11.2021) நிந்தவூரில் களப்பரிசோதனையுடன் கூடிய பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
தற்போதைய பருவப்பெயர்ச்சி மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் டெங்கு நுளம்பு பரம்பலுக்கான ஏதுநிலை அதிகமாகக் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பிராந்திய தொற்று நோய் பிரிவுடன் இணைந்ததாக டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே டெங்கு ஏதுநிலை காணப்படும் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் களப்பரிசோதனையுடன் கூடிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பரூஸா நக்பரின் தலைமையுடன் கூடிய நேரடி வழிகாட்டலில் டெங்கு களப்பரிசோதனைகள் இடம்பெற்றன.
தெரிவு செய்யப்பட்ட நிந்தவூர் 2ஆம், 20, 21, 22 ஆம் கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் வீடு வீடாகச் சென்று டெங்கு ஒழிப்புகளப்பரிசோதனைகள் இடம்பெற்றன.
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.ஏ.எம்.சித்தீக் மற்றும் சுகாதாரப்பரிசோதகர்கள், பல் நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், டெங்கு கள தடுப்பு உத்தியோகத்தர்களென சுமார் 100 பேர் இக்களப்பரிசோதனை நடவடிக்கைகளில் வெற்றிகரமாக ஈடுபட்டனர்.
மேலும் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பரூஸா நக்பரின் திட்டமிடலுடன் கூடிய ஐந்து மாத டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கடந்த அக்டோபர் மாதம் முதல் முன்னெடுக்கப்படுவதுடன்,
இதுவரை பொது மக்களிடையே டெங்கு பரவல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அறிவுறுத்தல் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவந்தன.
இந்நிலையில் பொது மக்கள் டெங்கு ஒழிப்புக்கான சுகாதார வழிமுறைகளைத் தவறாது கடைப்பிடிப்பதுடன்,
குறிப்பாக டெங்கு நுளம்பு குடம்பிகள் பெருகா வண்ணம் தமது வீடுகளையும், சுற்றுப்புறச் சூழலையும் தினமும் பேணிவருமாறு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பரூஸா நக்பர் கோரியுள்ளார்.
மக்கள் பொறுப்புணர்ந்து செயற்படாவிட்டால், களப்பரிசோதனை தொடர் தேர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு அத்தகையோர் மீது தயவு தாட்சண்யமின்றி வழக்குத்தொடரப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்